கடலூர்

சிதம்பரம் கோயிலுக்கு ரூ.20 லட்சத்தில் பேட்டரி கார், குடிநீர் சுத்திகரிப்பு இயந்திரம்: என்எல்சி இந்தியா வழங்கியது

தினமணி

என்எல்சி இந்தியா நிறுவனத்தின் சமூகப் பொறுப்புணர்வுத் திட்டத்தின் கீழ், சிதம்பரம் நடராஜர் கோயிலுக்கு ரூ.20 லட்சத்தில் பேட்டரி வாகனம், குடிநீர் சுத்திகரிப்பு இயந்திரம் ஆகியவை திங்கள்கிழமை வழங்கப்பட்டன.
 இதற்காக கோயிலில் நடைபெற்ற நிகழ்ச்சியில், என்எல்சி இந்தியா நிறுவனத்தின் மனிதவளத் துறை இயக்குநர் ஆர்.விக்ரமன் பங்கேற்று குடிநீர் சுத்திகரிப்பு இயந்திரம், பேட்டரி வாகனத்தை இயக்கிவைத்து கோயில் நிர்வாகத்தினரிடம் வழங்கினார்.
 இவற்றை கோயில் பொது தீட்சிதர் அமைப்பின் உதவிச் செயலர் என்.ஆர்.சண்முகதீட்சிதர் பெற்றுக்கொண்டார்.
 ரூ.11 லட்சத்தில் அமைக்கப்பட்டுள்ள நவீன குடிநீர் சுத்திகரிப்பு இயந்திரம், மணிக்கு ஆயிரம் லிட்டர் குடிநீரை சுத்திகரிக்கும் திறன் கொண்டது. ரூ.9 லட்சம் மதிப்பிலான, புகையில்லாமல் இயங்கும் பேட்டரி வாகனம் 7 பேர் அமர்ந்து செல்லும் வசதி கொண்டது. இதுகுறித்து ஆர்.விக்ரமன் கூறுகையில், என்எல்சி இந்தியா நிறுவனம் தனது சமூக மேம்பாட்டுப் பணிகளில் தற்போது விவசாயத்துக்கும், குடிநீருக்கும் முக்கியத்துவம் அளித்து வருகிறது. அந்த வகையில், வாலாஜா ஏரியைத் தூர்வாரி அதன் கொள்ளளவை அதிகரித்ததுபோல பரவனாறு, செங்கால் ஓடை, பெருமாள் ஏரி ஆகியவற்றையும் புனரமைத்து வருவதாகத் தெரிவித்தார்.
 மேலும், கோயில் நிர்வாகம் கேட்டுக்கொண்டதைத் தொடர்ந்து ஆழ்துளைக் கிணறு தோண்டும் பணி, கோயில் குளத்தைப் புனரமைக்கும் பணிகளை மேற்கொள்ளவும் நடவடிக்கை எடுக்கப்படும் என்றார்.
 நிகழ்ச்சியில் என்எல்சி இந்தியா சமூகப் பொறுப்புணர்வு, கல்வி மற்றும் விளையாட்டுத் துறைத் தலைமைப் பொது மேலாளர் ஆர்.மோகன், துணைப் பொது மேலாளர் ஜே.பீட்டர் ஜேம்ஸ் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
 
 
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

கட்கபுரீஸ்வரா் கோயில் கும்பாபிஷேகம்

திருச்செந்தூரில் மே 22இல் வைகாசி விசாகம்

உடல் பருமன் குறைப்பு சிகிச்சையில் இளைஞா் உயிரிழப்பு: மருத்துவமனை மீது நடவடிக்கை எடுக்க முதல்வரிடம் வலியுறுத்தல்

மண்டல பனைபொருள் பயிற்சி நிலையத்தில் பதநீா் விற்பனை

அரியாங்குப்பம் கோயில் திருவிழா கொடியேற்றம்

SCROLL FOR NEXT