குரூப்-4 தேர்வு: 82,595 பேர் எழுதினர்
கடலூர் மாவட்டத்தில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற குரூப்- 4 தேர்வை 82,595 பேர் எழுதினர்.
கடலூர் மாவட்டத்தில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற குரூப்- 4 தேர்வை 82,595 பேர் எழுதினர்.
தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் சார்பில் குரூப் -4 போட்டித் தேர்வு கடலூர், சிதம்பரம், காட்டுமன்னார்கோவில், குறிஞ்சிப்பாடி, நெய்வேலி, பண்ருட்டி, திட்டக்குடி, விருத்தாசலம், புவனகிரி, வேப்பூர் உள்ளிட்ட பத்து வட்டங்களில் 315 தேர்வு மையங்களில் நடைபெற்றது. இதில் 96,690 பேர் தேர்வு எழுத அனுமதிக்கப்பட்டிருந்தனர்.
ஆனால், 82 ஆயிரத்து 595 பேர் மட்டுமே தேர்வை எழுதினர். இது 85 சதவீதமாகும். 14,095 பேர் தேர்வு எழுத வரவில்லை.
தேர்வு நடைபெற்ற மையங்களில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டிருந்தது. முறைகேடுகள் எதுவும் நடைபெறாமல் கண்காணிக்கும் பொருட்டு, துணை ஆட்சியர் நிலையில் பறக்கும் படைகள் அமைக்கப்பட்டு கண்காணிப்புப் பணியில் ஈடுபட்டனர். மேலும், விடியோ கேமராக்கள் மூலமும் பதிவு செய்யப்பட்டது.
புதிய நடைமுறை...: தேர்வர்களுக்கு காலை 9.30 மணிக்கு புகைப்படம் இடம் பெற்றிருந்த விடைத் தாள்கள் வழங்கப்பட்டன. இதில், தேர்வரின் பெயர், புகைப்படம், பதிவெண், விருப்பப்பாடம், தேர்வுக் கூடத்தின் பெயர் உள்ளிட்ட தகவல்கள் விடைத் தாளிலேயே அச்சடிக்கப்பட்டிருந்தன.
இந்தப் புதிய நடைமுறையால் பதிவெண் உள்ளிட்ட தகவல்களைத் தவறாக குறிப்பிடும் தேர்வர்களுக்கு விதிக்கப்பட்டு வந்த மதிப்பெண் குறைப்பு தடுக்கப்படும். மேலும், தேர்வு முடிவுகள் வெளியிடத் தேவையான கால அவகாசம் கணிசமான அளவில் குறையும் என அதிகாரிகள் தெரிவித்தனர்.
காலை 10 மணிக்கு வினாத் தாள் வழங்கப்பட்டு மதியம் ஒரு மணி வரை தேர்வு நடைபெற்றது. இந்த முறை தேர்வர்களுக்கு 5 நிமிடம் கூடுதலாக கால அவகாசம் அளிக்கப்பட்டது.
தேர்வு ஒருங்கிணைப்பாளரான மாவட்ட ஆட்சியர் பிரசாந்த் மு. வடநேரே பல்வேறு தேர்வு மையங்களுக்குச் சென்று ஆய்வு மேற்கொண்டார்.
மாவட்டம் முழுவதும் துணை ஆட்சியர் நிலையில் அமைக்கப்பட்டிருந்த பறக்கும் படையினர் தேர்வு மையங்களில் திடீர் சோதனை மேற்கொண்டனர்.
வினாத்தாளை தலையில் சுமந்து சென்ற ஊழியர்கள்...: கடலூர் அருகே திருவந்திபுரம் ஊராட்சியில் புகழ் பெற்ற பெருமாள் கோயில் அமைந்துள்ளது. ஞாயிற்றுக்கிழமை முகூர்த்த நாள் என்பதால், இந்தக் கோயிலில் ஏராளமான திருமணங்கள் நடைபெற்றன. இதனால், அந்தப் பகுதியில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. இதில், திருவந்திபுரம் அரசு மேல்நிலைப் பள்ளியில் தேர்வு எழுதுபவர்களுக்காக வினாத் தாள் கொண்டு சென்ற வாகனம் நெரிசலில் சிக்கிக் கொண்டது. நேரம் கடந்து கொண்டிருந்த நிலையில், அரசு ஊழியர்கள் இருவர் தேர்வு வினாத் தாள்களை தலையில் சுமந்தபடி போலீஸ் பாதுகாப்புடன் தேர்வு மையத்துக்கு எடுத்துச் சென்று சேர்த்தனர்.
தாமதம்...: கடலூர் முதுநகர், மோகன்சிங் தெருவில் உள்ள அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் 400 பேர் தேர்வு எழுதினர். இதற்காக சீல் வைக்கப்பட்டு வந்த வினாத் தாள் கட்டை விடியோ பதிவுடன் பிரித்து விநியோகிக்கப்பட வேண்டும். ஆனால், விடியோ எடுப்பவர் வராததால் பதற்றம் அடைந்த அரசு அதிகாரிகள் ஒரு பெண் அலுவலரின் செல்லிடப்பேசி மூலம் படம் பிடித்து வினாத் தாள் அடங்கிய கட்டைப் பிரித்தனர்.
இதனால், வினாத் தாள் வழங்குவதில் தாமதம் ஏற்பட்டது.
இதே பள்ளியில் பார்வையற்ற ஒரு மாணவர், ஒரு மாணவி தேர்வு எழுத வந்தனர். பார்வையற்ற மாணவருக்கு தேர்வு எழுத உதவும் உதவியாளர் வராத நிலையில், உடல் நலக் குறைவால் தேர்வுப் பணியிலிருந்து வீட்டுக்குப் புறப்பட்ட பெண் அலுவலர் ஒருவர் அந்த மாணவருக்கு உதவியாளராக மாறி தேர்வை எழுத உதவினார்.