கடலூர்

மோகன் பாகவத் கருத்துக்கு மத்திய அரசு பதில் சொல்ல வேண்டும்: கனிமொழி எம்.பி. 

தினமணி

ஆர்எஸ்எஸ் தலைவர் மோகன் பாகவத்தின் கருத்துக்கு மத்திய அரசு பதில் சொல்ல வேண்டும் என்று திமுக மகளிரணிச் செயலாளர் கனிமொழி எம்.பி. வலியுறுத்தினார்.

கடலூர் மாவட்ட திமுக மற்றும் தோழமைக் கட்சிகள் சார்பில், பேருந்துக் கட்டண உயர்வைக் கண்டித்து, கடலூர் மஞ்சக்குப்பத்தில் செவ்வாய்க்கிழமை இரவு பொதுக்கூட்டம் நடைபெற்றது.

கூட்டத்தில் திமுக மகளிரணிச் செயலாளர் கனிமொழி எம்.பி. பேசியதாவது: 2016 சட்டப்பேரவைத் தேர்தலுக்கு முன்பாக மேடையில் உள்ள கட்சிகளின் கூட்டணி அமைந்திருந்தால் பேருந்துக் கட்டண உயர்வு உள்பட பல்வேறு வாழ்வாதார பிரச்னைகளுக்காக போராட்டம் நடத்தும் நிலையே ஏற்பட்டிருக்காது.

தர்மயுத்தம் என்ற பெயரில் தொடங்கிய போராட்டத்தை தனக்கு துணை முதல்வர் பதவி கிடைத்ததும் ஒருவர் விட்டுவிட்டார். கர்ணம் தப்பினால் மரணம் என்ற நிலையில், தமிழக அரசு தற்போது செயல்பட்டு வருவதால் கிடைக்கும் வரை லாபம் என்ற நோக்கில் செயல்படுகிறார்கள்.

மத்திய அரசுடன் இணக்கமாக இருக்கிறோம் என்று தமிழக முதல்வர், அமைச்சர்கள் கூறி வருகிறார்கள். ஆனால், ஒரு மருத்துவக் கல்லூரியைக் கூட தமிழகத்துக்கு கொண்டு வர முடியவில்லை. நீட் தேர்விலிருந்து விலக்கு பெற முடியவில்லை. தமிழை உயர்நீதிமன்றத்தில் வழக்காடு மொழியாக கொண்டு வரமுடியவில்லை. தமிழகத்தின் ஒவ்வொரு வாழ்வாதார பிரச்னையிலும், மொழி, கலாசாரத்தை காப்பதிலும் மத்திய அரசு ஒத்துழைப்பதில்லை. இதனை தமிழக அரசும் தட்டிக்கேட்க முடியாத நிலையில் உள்ளது. எனவே, நமது மொழி, கலாசாரத்தை பாதுகாக்க நாம் இணைந்து செயல்பட வேண்டும்.

ஆர்.எஸ்.எஸ்.தலைவர் மோகன் பாகவத் தனது பேச்சின்போது 3 நாள்களில் ஆர்.எஸ்.எஸ்.காரர்கள் போருக்கு ஆயத்தமாகும் வல்லமையுடன் உள்ளார்கள் என்று கூறியுள்ளார். இது, இந்திய ராணுவத்தை கேவலப்படுத்தும் செயலாகும். அவர் ராணுவத்தை உருவாக்குவது இந்தியாவிற்குள்ளேயே போரிடுவதற்காகவா?
எனவே, மோகன் பாகவத்தின் கருத்துக்கு மத்திய அரசு கண்டிப்பாக பதில் சொல்ல வேண்டும் என்றார் அவர்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

தொழிலாளா் தினம்: கொடியேற்று நிகழ்ச்சிகள்

முதலமைச்சரின் மாநில இளைஞா் விருதுக்கு விண்ணப்பிக்க அழைப்பு

நரிமணத்தில் நீா் மோா் பந்தல் திறப்பு

பஞ்சாப் சுழலில் சிக்கிய சென்னை: மீட்டாா் கெய்க்வாட்

‘தலைமைச் செயலக பணி’: தரகா்களிடம் ஏமாறும் பட்டதாரிகள்

SCROLL FOR NEXT