கடலூர்

சிறுவன் கொலை வழக்கில் பெண்ணுக்கு ஆயுள் சிறை: மகளிர் நீதிமன்றம் தீர்ப்பு

தினமணி

வேப்பூர் அருகே 4 வயது சிறுவன் கொல்லப்பட்ட வழக்கில், பெண்ணுக்கு ஆயுள் சிறை தண்டனை விதித்து கடலூர் மகளிர் நீதிமன்றம் வெள்ளிக்கிழமை தீர்ப்பளித்தது.
 கடலூர் மாவட்டம், வேப்பூர் அருகே உள்ள சித்தேரியைச் சேர்ந்த ராமர் மனைவி பரமேஸ்வரி (20). இவர்களது திருமணத்துக்கு முன்பு பரமேஸ்வரி அருள்ராஜ் என்பவரை காதலித்து வந்தாராம். இந்த நிலையில், ராமருடன் அவருக்கு திருமணம் நடைபெற்றது. தொடர்ந்து, ராமர் வேலைக்காக வெளிநாட்டுக்குச் சென்று விட்டார். இதனை தனக்குச் சாதகமாக பயன்படுத்திக் கொண்ட பரமேஸ்வரி, அருள்ராஜை தனது வீட்டுக்கு வரவழைத்து பழகி வந்தாராம்.
 இதை ராமரின் உறவினரான முருகேசன் என்பவர் பார்த்து கண்டித்துள்ளதோடு, ராமருக்கும் தகவல் தெரிவித்தாராம். இதனால், இருவருக்கும் இடையே தகராறு ஏற்பட்டு வந்துள்ளது.
 இந்த நிலையில், கடந்த 23-8-2016 அன்று மாலை முருகேசன்-சங்கீதா தம்பதியரின் 2 மகள்கள், 4 வயது மகன் நித்திஷ் ஆகியோர் பள்ளி முடிந்து வீடு திரும்பினர். ஆனால், வீட்டில் தங்களது பெற்றோர் இல்லாததால் பரமேஸ்வரியின் வீட்டுக்குச் சென்றுள்ளனர்.
 அப்போது, முருகேசன் தம்பதி மீது கோபத்திலிருந்த பரமேஸ்வரி நித்திஷை தனியாக அழைத்துச் சென்று பிளேடால் அவரது கழுத்தை அறுத்து, அருகிலிருந்த பயன்படுத்தாத கழிவறையில் சடலத்தை வீசிச் சென்றார். பின்னர் சிறுவனின் சடலம் கைப்பற்றப்பட்டு பரமேஸ்வரி கைது செய்யப்பட்டார்.
 இந்த வழக்கு விசாரணை கடலூர் அனைத்து மகளிர் நீதிமன்றத்தில் நீதிபதி லிங்கேஸ்வரன் முன்னிலையில் நடைபெற்று வந்தது. வழக்கில் நீதிபதி வெள்ளிக்கிழமை தீர்ப்பு வழங்கினார். அதில், பரமேஸ்வரியின் குற்றம் உறுதி செய்யப்பட்டதால் அவருக்கு 2 ஆண்டுகள் கடுங்காவலுடன் கூடிய ஆயுள் தண்டனை விதித்து தீர்ப்பளித்தார்.
 மேலும், ரூ.10 ஆயிரம் அபராதமும், அதனைக் கட்டத்தவறினால் மேலும் 2 ஆண்டுகள் சிறைத்தண்டனையும் விதிக்கப்பட்டது.
 இதனையடுத்து அவர் கடலூர் மத்திய சிறையில் அடைக்கப்பட்டார்.
 தண்டனையை குறைக்க மறுப்பு: நீதிபதி லிங்கேஸ்வரன் தனது தீர்ப்பினை வாசிக்கையில், பரமேஸ்வரி தனக்கு ஒரு குழந்தை உள்ளதாகவும் அதன் எதிர்காலம் கருதி தண்டனையைக் குறைக்குமாறும் கோரினார். ஆனால், கொலை செய்யப்பட்டதும் ஒரு குழந்தைதான் என்பதை நீதிபதி சுட்டிக்காட்டி தண்டனையை குறைக்க மறுத்துவிட்டார்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

காரல் மாா்க்ஸ் பிறந்தநாள் விழா

3 மணி நேர போராட்டம்: ஸ்வியாடெக் முதல் முறை சாம்பியன்

வித்யா குரு அலங்காரத்தில் முனீஸ்வரா்...

இன்று வெளியாகிறது பிளஸ் 2 தோ்வு முடிவுகள்

துளிகள்...

SCROLL FOR NEXT