முகப்பு
கடலூர்

தண்ணீர் தட்டுப்பாட்டால் நாற்றுகளை நடுவதில் சிக்கல்: என்எல்சி சுரங்க நீர் கிடைக்குமா?

குறிஞ்சிப்பாடி வட்டாரத்தில் நிலவும் தண்ணீர் தட்டுப்பாட்டால், பின்பட்ட குறுவை சாகுபடிக்கு தயார் நிலையில் உள்ள நாற்றுகளை நட முடியாமல் விவசாயிகள் பரிதவிக்கின்றனர்.

Updated On : 30 ஜனவரி, 2024 at 1:14 PM
பகிர்:

குறிஞ்சிப்பாடி வட்டாரத்தில் நிலவும் தண்ணீர் தட்டுப்பாட்டால், பின்பட்ட குறுவை சாகுபடிக்கு தயார் நிலையில் உள்ள நாற்றுகளை நட முடியாமல் விவசாயிகள் பரிதவிக்கின்றனர். எனவே, என்எல்சி சுரங்க நீரை திறந்துவிட வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர்.
 குறிஞ்சிப்பாடி வட்டாரமானது மண் வளம், நீர் வளம் நிறைந்த பகுதி என்பதால் இங்கு விவசாயம் முக்கியத் தொழிலாக உள்ளது.
 இந்தப் பகுதியில் நெல், கரும்பு, மணிலா, வாழை உள்ளிட்ட பயிர்கள் செழித்து வளரும். போதிய மழை இல்லாததால் நிலத்தடி நீர் மட்டம் சரிவு, வறண்டு போன ஏரிகள், என்எல்சி இந்தியா நிறுவனத்தின் சுரங்க நீர் முறையாகக் கிடைக்காதது போன்ற காரணங்களால் இந்தப் பகுதியில் தண்ணீர் தட்டுப்பாடு ஏற்பட்டு விவசாயம் கேள்விக்குறியாகியுள்ளது.
 இந்த நிலையில், சுமார் 4 ஆயிரம் ஏக்கரில் பின்பட்ட குறுவை சாகுபடிக்கு விடப்பட்ட நாற்றுகள், போதிய தண்ணீர் இல்லாததால் நடவு செய்ய முடியாமல் உள்ளன. இதுகுறித்து குறிஞ்சிப்பாடி உழவர் மன்றத் தலைவர் ஆர்.கே.ராமலிங்கம் கூறியதாவது: குறிஞ்சிப்பாடி வடக்கு, தெற்கு, வரதராஜன்பேட்டை, குருவப்பன்பேட்டை, பூதம்பாடி, கொத்தவாச்சேரி, எல்லப்பன்பேட்டை போன்ற பகுதிகளில் பின்பட்ட குறுவை சாகுபடிக்காக சுமார் 4 ஆயிரம் ஏக்கர் நிலங்களுக்கு நாற்று விட்டு வைத்துள்ளனர்.
 இந்தப் பகுதி விவசாயிகள் பெரும்பாலும் என்எல்சி சுரங்கம் 1-ஏ-வில் இருந்து வரும் தண்ணீர் மற்றும் பருவ மழையை நம்பியே நாற்றுவிட்டுள்ளனர்.
 இந்த நிலையில், என்எல்சி சுரங்க நீர் வரத்து முற்றிலும் நின்றுவிட்டது. ஆழ்துளை கிணற்றிலும் போதிய அளவில் தண்ணீர் கிடைக்கவில்லை. நாற்றுவிட்டு தற்போது 20 நாள்களை கடந்துவிட்டது.
 எனவே, இதுகுறித்து மாவட்ட ஆட்சியர் என்எல்சி நிர்வாகத்திடம் பேச்சுவார்த்தை நடத்தி, சுரங்கம் 1 ஏ-இல் இருந்து கன்னியாகோயில் ஓடை வழியாக அதிகளவு தண்ணீரை திறந்துவிட உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றார் அவர்.
 
 
 

முழு கட்டுரையைப் படிக்க →