பாதுகாப்பற்ற நிலையில் வரலாற்றுப் பொக்கிஷங்கள்!
கடலூர் அரசு அருங்காட்சியகத்தில் பழங்கால சிலைகள் உள்ளிட்ட வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த பொருள்கள்
கடலூர் அரசு அருங்காட்சியகத்தில் பழங்கால சிலைகள் உள்ளிட்ட வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த பொருள்கள் பாதுகாப்பற்ற நிலையில் வைக்கப்பட்டுள்ளதாக சமூக ஆர்வலர்கள் கவலை தெரிவித்தனர்.
மாவட்டத்துக்கு ஓர் அருங்காட்சியகம் என்ற தமிழக அரசின் கொள்கைப்படி 8-ஆவது மாவட்ட அருங்காட்சியகமாக 1989-ஆம் ஆண்டு நவ.30-ஆம் தேதி கடலூரில் அரசு மருத்துவமனை எதிரே அரசு அருங்காட்சியகம் தொடங்கப்பட்டது. அப்போது, வாடகைக் கட்டடத்தில் தொடங்கப்பட்ட அருங்காட்சியகம், இன்று வரை அதே இடத்திலேயே தொடர்கிறது. தற்போது மாதம் ரூ.13,838
வாடகையாக செலுத்தப்பட்டு வருகிறது.
ஆனால், இட நெருக்கடியால் மதிப்புமிக்க பழங்காலப் பொருள்களை காட்சிப்படுத்த முடியாமலும், போதுமான பாதுகாப்பு வசதி இல்லாததாலும் 82 ஐம்பொன் சிலைகள் சென்னை அருங்காட்சியகத்துக்கு வழங்கப்பட்டுள்ளன.
கி.பி.10-ஆம் நூற்றாண்டைச் சேர்ந்த சண்டிகேஸ்வரர் சிலை, 12-ஆம் நூற்றாண்டைச் சேர்ந்த திருமால் சிலை உள்ளிட்ட ஏராளமான கல்சிலைகள் அருங்காட்சியகத்தின் நுழைவு வாயிலில் எந்தவிதமான பாதுகாப்பும் இல்லாமல், அதன் பழைமையை போற்ற முடியாமல் குவித்து வைக்கப்பட்டுள்ளன.
கடலூர் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் அகழாய்வின்போது கண்டெடுக்கப்பட்ட 4 கைகளுடன் காட்சி தரும் வீரபத்திரர் சிலை, சுப்பிரமணியர் சிலை, சூரியன் சிலை, பைரவர் சிலை, 80 மில்லியன் ஆண்டுகளுக்கு முந்தைய அம்மோனைட்ஸ் படிவங்கள் (கல்மரம்), இசைக் கருவிகள், 9-ஆம் நூற்றாண்டைச் சேர்ந்த முதுமக்கள் தாழி, 17-ஆம் நூற்றாண்டைச் சேர்ந்த கலைமலி அம்மி, திமிங்கலத்தின் எலும்புக் கூடு, பழங்கால நாணயங்கள், நாணய மாதிரிகள், சிந்து சமவெளி நாகரிகத்துடன் தொடர்புடைய சிவப்பு பானை எழுத்துகள், சுடுமண் குழாய்கள் உள்பட சுமார் 4 ஆயிரம் பொருள்கள் இங்கு உள்ளன. ஆனால், அவற்றை காட்சிப்படுத்த போதிய இட வசதி இல்லாத காரணத்தால், அதன் பெருமையை மற்றவர்கள் தெரிந்துக் கொள்ள முடியாதபடி குவித்து வைக்கப்பட்டுள்ளன. எனவே, இந்தப் பொருள்களை காட்சிப்படுத்தும் வகையில் விசாலமான இடம் தேவை என வலியுறுத்தப்பட்டு வருகிறது.
இதுகுறித்து அரிமா சங்க நிர்வாகி கே.திருமலை கூறியதாவது: கடந்த 25 ஆண்டுகளாக அருங்காட்சியகத்தை சொந்தக் கட்டடத்துக்கு மாற்ற வேண்டும் என்ற கோரிக்கை எழுப்பப்பட்டு வருகிறது.
தற்போது, மாவட்ட ஆட்சியர் அலுவலகத்துக்கு புதிய கட்டடம் கட்டப்பட்டு இடமாற்றம் செய்யப்பட்டுள்ளது. ஆங்கிலேயர் ஆட்சிக் காலத்தில் கட்டப்பட்ட மாவட்ட ஆட்சியர் பழைய அலுவலகத்தை அரசு அருங்காட்சியகமாக மாற்ற வேண்டும். இதனால், அந்தக் கட்டடம் பயன்பாட்டுக்கு வருவதோடு, பழைமை மாறாமல் பாதுகாக்கப்படும்.
அரசுக்கு வாடகை மிச்சமாவதோடு, பார்வையாளர்களை ஈர்க்கும் இடமாகவும் பழைய ஆட்சியரகம் அமையும்.
போதிய இட வசதி இருந்தும், அரசின் உத்தரவு கிடைக்காததால் பழங்கால பொருள்கள் பாதுகாப்பில்லாமல் வெயில், மழையில் கிடந்து சேதமடையும் நிலை ஏற்பட்டுள்ளது. எனவே, இதன் மீது துறை அமைச்சர் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றார் அவர்.