கடலூர்

ஹைட்ரோ கார்பன் திட்டம்: மக்களின் அச்சத்தைப் போக்க வேண்டும்: மத்திய அரசுக்கு விவசாய சங்கங்களின் கூட்டியக்கம் வலியுறுத்தல்

DIN


காவிரி டெல்டா பகுதியில் செயல்படுத்தப்படவுள்ள ஹைட்ரோ கார்பன் திட்டம் குறித்து பொதுமக்களிடையே நிலவும் அச்சத்ததைப் போக்க மத்திய அரசு முன் வர வேண்டும் என அனைத்து விவசாய சங்கங்களின் கூட்டியக்கம் வலியுறுத்தியது.
சிதம்பரம் அருகே வல்லம்படுகை சாலையில் உள்ள ஜி.ஆர். மூலிகைப் பண்ணையில் அனைத்து விவசாய சங்கங்களின் கூட்டியக்க நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டம் புதன்கிழமை நடைபெற்றது. 
கூட்டத்தில் தமிழ்நாடு விவசாய சங்கங்களின் கூட்டியக்க மாநில பொதுச் செயலர் பெ.ரவீந்திரன், தமிழக விவசாயிகள் வாழ்வாதாரப் பாதுகாப்புச் சங்கத் தலைவர் ஜெய.சஞ்சீவி, துணைத் தலைவர் ரா.மணிவண்ணன், சேத்தியாத்தோப்பு அணைக்கட்டு நீரைப் பயன்படுத்துவோர் சங்கத் தலைவர் சிவ.சரவணன், இணைச் செயலர் பா.பாபு, வீராணம் ஏரி பாசன விவசாயிகள் சங்கத் தலைவர் ஆ.பாலு,  துணைத் தலைவர் டி.மனோகர், பாசிமுத்தான் ஓடை பாசன விவசாயிகள் சங்கச் செயலர் ந.முனுசாமி, குன்னன் பாசன விவசாயிகள் சங்கத் தலைவர் எஸ்.சிற்றரசு ஆகியோர் பங்கேற்றுப் பேசினர்.
பின்னர், விவசாய சங்கங்களின் கூட்டியக்கத்தின் மாநில பொதுச் செயலர் பெ.ரவீந்திரன் செய்தியாளர்களிடம் கூறியதாவது: ஹைட்ரோ கார்பன் திட்டத்தால் கடும் அதிருப்தி அடைந்துள்ள காவிரி டெல்டா மாவட்ட விவசாயிகள் இந்தத் திட்டத்தைக் கைவிட தொடர்ந்து வலியுறுத்தி வருகின்றனர்.
உலக அரங்கில் பல வளர்ந்த நாடுகள் தங்களிடம் பூமிக்கடியில் உள்ள இயற்கை வளங்களை முழுமையான அளவில் எடுப்பதில்லை. 
பூமிக்கடியில் புதைந்து கிடக்கும் இயற்கை வளங்களை எடுக்க முற்பட்டால், பல இயற்கைக்கு மாறான நிகழ்வுகள் உருவாகும். மேலும் சுற்றுச் சூழலும் பாதிக்கப்படும். தற்போது மத்திய அரசு தமிழகத்தில் காவிரிப் படுகையில் ஹைட்ரோ கார்பன் எடுக்க அனுமதியளித்திருப்பதால், விவசாயிகள் தங்களது வாழ்வாதாரம் பறிபோகுமோ என்ற அச்சத்தில் உள்ளனர்.
முதல் ஹைட்ரோ கார்பன் மண்டலம் : இவ-ஞநஏட-2017/1 என்ற குறியீட்டுடன்  மரக்காணம் பகுதியில் தொடங்கி விழுப்புரம் மாவட்டக் கடற்கரையோரப் பகுதிகளில் சுமார் 139 சதுர கி.மீ. பரப்பளவிலும், புதுவை யூனியன் பிரதேச கடற்கரையோரப் பகுதியில் 2 சதுர கி.மீ. பரப்பளவிலும், மரக்காணம் முதல் கடலூர் வரை 1,654 சதுர கி.மீ. பரப்பளவில் கடல் பகுதியை உள்ளடக்கி 1,794 சதுர கி.மீ. பரப்பளவுக்கு முதல் மண்டலம் வடிவமைக்கப்பட்டுள்ளது.
இரண்டாவது ஹைட்ரோ கார்பன் மண்டலம்: (இவ-ஞநஏட-2017/2) என்ற குறியீட்டுடன் நாகப்பட்டினம் மாவட்டக் கடற்கரை பகுதியில் 142 சதுர கி.மீ பரப்பளவிலும், காரைக்கால் கடற்கரையோரப் பகுதியில் 39 சதுர கி.மீ. பரப்பளவிலும், வேதாரண்யம் முதல் கடலூர் மாவட்டம், பரங்கிப்பேட்டை வரை பிச்சாவரம் சதுப்பு நிலக் காட்டுக்கு 490 மீட்டர் தொலைவுக்கு அப்பால்  உள்ள கடல் பகுதியில் 2,393 சதுர கி.மீ. பரப்பளவு உள்ளிட்ட 2,574 சதுர கி.மீ. பரப்பளவில் இரண்டாவது மண்டலம் வடிவமைக்கப்பட்டு வேதாந்தா நிறுவனத்தின் வசம் ஒப்படைக்கப்பட்டுள்ளது.
மூன்றாவது ஹைட்ரோ கார்பன் மண்டலம்: கடலூர் மாவட்டம், குள்ளஞ்சாவடி முதல் நாகப்பட்டினம் மாவட்டம், தரங்கம்பாடி வரை புவனகிரி, திருவாருர் ஆகிய பகுதிகள் அடங்கிய  நிலப்பரப்பில் 731 சதுர கி.மீ. பரப்பளவில் அமையவுள்ளது.
சுற்றுச் சூழல் ஆய்வு அனுமதி: 
வேதாந்தா நிறுவனம் முதல் மண்டலத்தில் 116 இடங்களிலும், இரண்டாவது மண்டலத்தில் 158 இடங்களிலும் துளையிட்டு ஆய்வுப் பணிகளை மேற்கொள்ள மத்திய சுற்றுச்சூழல் மற்றும் வனத் துறை அமைச்சகத்திடம் அனுமதிக்கு விண்ணப்பித்துள்ளது. 
பூமிக்கடியில் 3 ஆயிரம் மீட்டர் முதல் 5,200 மீட்டர் வரை துளையிட்டு ஆய்வு மேற்கொள்ள  சுற்றுச் சூழல் அமைச்சகம் அனுமதி வழங்கியுள்ளது. முதல், இரண்டாம் மண்டலங்களை ஆய்வு செய்ய ஒப்பந்தம் செய்துள்ள  வேதாந்தா நிறுவனம் கச்சா எண்ணெய் எடுக்கும் பணிகளுக்கு 10 முதல் 12 ஆண்டுகள் ஒப்பந்தம் செய்துள்ளது.
மூன்றாவது மண்டலத்தில் 67 கிணறுகள் அமைத்து சுற்றுச் சூழல் ஆய்வுப் பணிகள் மேற்கொள்ள உரிமம் பெற்றுள்ள ஓ.என்.ஜி.சி. நிறுவனம், ஒப்பந்தம் செய்துள்ள மூன்றாவது மண்டலத்தில் நான்கு இடங்களைச் செயல் இடமாகப் பிரித்து புவனகிரி பகுதியில் 17 கிணறுகள், திருவாரூர் மாவட்டத்தில் உள்ள பெரியக்குடி பகுதியில் 10 கிணறுகள், கடலூர் பகுதியில் 35 கிணறுகள், நாகப்பட்டினம் மாவட்டத்தில் கொள்ளிடம் முதல் தரங்கம்பாடி வரை 5 கிணறுகள் என  67 கிணறுகள் அமைத்து பணிகளை மேற்கொள்ள திட்டமிட்டுள்ளன. 
கிணறுகள் அமைய உள்ள இடங்கள்: ஓ.என்.ஜி.சி. நிறுவனம் தனக்கு ஒதுக்கீடு செய்த மூன்றாவது மண்டலத்தில்  மூன்றாவது முக்கியத்துவம் வாய்ந்த ஆண்டிமடம் புவனகிரி கடினப்பாறை  ஆய்வுப் பிரிவில் 14 இடங்களில் ஆய்வுக் கிணறுகளை அமைக்க  இடங்களை தேர்வு செய்துள்ளது.
விவசாயம் செய்யக் கூடிய வளமான நிலப் பகுதிகளில் ஹைட்ரோ கார்பன் எடுக்க ஆய்வு மேற்கொள்ள மத்திய அரசிடம் அனுமதி பெற்று ஓ.என்.ஜி.சி. நிறுவனம் பணிகளைத் தொடக்க உள்ளது. இந்த ஆய்வுக்காக  எந்த நிறுவனமும் மாவட்ட நிர்வாகத்திடம் அனுமதியைப் பெறவில்லை என கடலூர் மாவட்ட ஆட்சியர் தெரிவித்தார்.
இதேபோல, மாவட்ட மாசுக் கட்டுப்பாட்டு அதிகாரிகள் ஹைட்ரோ கார்பன் திட்டத்துக்கு அனுமதி வழங்கவில்லை எனக் கடிதம் கொடுத்தனர்.
பொதுவாக எந்தத் திட்டத்தைச் செயல்படுத்துவதாக இருப்பினும் பொதுமக்களிடையே கருத்து கேட்பது வழக்கம். ஆனால், வழக்கத்துக்கு மாறாக, பொதுமக்களின் கருத்துகளைக் கேட்காமலே நேரடியாக திட்டத்தைச் செயல்படுத்த மத்திய அரசு முயல்வது சந்தேகங்களை எழுப்பியுள்ளது.
மத்திய, மாநில அரசுகள் ஹைட்ரோ கார்பன் திட்டம் மற்றும் நீரியல் விரிசல் முறை குறித்து விஞ்ஞானிகள், புவியியல் வல்லுநர்கள், நீரியல் நிபுணர்கள், மாசுக் கட்டுப்பாட்டு வாரிய அதிகாரிகள்  அடங்கிய குழுவை அமைத்து, பொதுமக்களை சந்தித்து தக்க புரிதலை உருவாக்கி, கருத்துகளை அறிய வேண்டும். 
ஹைட்ரோ கார்பன் திட்டம் மத்திய அரசுக்கு வேண்டுமானால் வரமாக அமையலாம்; ஆனால், விவசாயிகளுக்கு அது சாபமாக  அமைந்து விடக்கூடாது. வருகிற 18-ஆம் தேதி தஞ்சையில் விவசாய சங்கங்களின் ஒருங்கிணைந்த நிர்வாகிகள் கூட்டத்தில் அடுத்த கட்ட போராட்ட வடிவம் குறித்து முடிவு எடுக்கப்படும் என்றார் அவர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ஜீப் மீது லாரி மோதி விபத்து: 6 பேர் பலி

கரோனா தடுப்பூசியால் ’ரத்தம் உறைதல்’ பாதிப்பு ஏற்படலாம் -ஆய்வில் தகவல்

வெப்ப அலை: தமிழகத்துக்கு மே 4 வரை மஞ்சள் எச்சரிக்கை!

வேதாரண்யம் உப்பு சத்தியாகிரக நினைவு நாள்: தியாகிகளுக்கு அஞ்சலி!

லாரி மீது கார் மோதி விபத்து: 5 பேர் பலி

SCROLL FOR NEXT