கடலூர்

உப்பாக மாறிய தண்ணீரால் கருகும் நெல் பயிர்கள்!

கடலூர் மாவட்டம், காட்டுமன்னார்கோவில் அருகே அத்திப்பட்டு ஆலம்பாடி கிராமத்தில் குறுவை சாகுபடி செய்த வயல்களில் தண்ணீர் உப்புத் தன்மையாக மாறியதால், நெல் பயிர்கள் கருகி வருகின்றன

ஜி. சுந்தர் ராஜன்

கடலூர் மாவட்டம், காட்டுமன்னார்கோவில் அருகே அத்திப்பட்டு ஆலம்பாடி கிராமத்தில் குறுவை சாகுபடி செய்த வயல்களில் தண்ணீர் உப்புத் தன்மையாக மாறியதால், நெல் பயிர்கள் கருகி வருகின்றன. இதனால், விவசாயிகள் வேதனையடைந்துள்ளனர்.
 காட்டுமன்னார்கோவில் அருகே குமராட்சி ஊராட்சி ஒன்றியத்துக்கு உள்பட்ட அத்திப்பட்டு ஆலம்பாடி கிராமம் கொள்ளிடக் கரையோரத்தில் அமைந்துள்ளது. கடலிலிருந்து சுமார் 13 கி.மீ. தொலைவில் உள்ள இந்தக் கிராமத்தில், ஆழ்குழாய்க் கிணறு மூலம் விவசாயம் செய்யப்பட்டு வருகிறது.
 இங்கு, விவசாயிகள் ஏற்கெனவே 30 அடி ஆழத்தில் ஆழ்குழாய்க் கிணறு அமைத்து விவசாயம் செய்து வந்தனர். இந்தத் தண்ணீர் உப்புத் தன்மையாக மாறியதால் விவசாயம் செய்ய முடியாத நிலையில் இருந்தனர்.
 அதன் பிறகு, சில விவசாயிகள் சுமார் ரூ.10 லட்சத்தில் 300 அடிக்கு மேல் ஆழ்குழாய்க் கிணறு அமைத்து குறுவை சாகுபடி செய்யத் திட்டமிட்டு, நடவுப் பணியைத் தொடங்கினர். நடவு செய்த 30 நாள்களுக்குப் பிறகு, கடந்த காலங்களைப் போன்று நெல் பயிர்கள் கருக ஆரம்பித்தன.
 கொள்ளிடம் ஆற்றில் கடந்த 10 ஆண்டுகளாக சி அரசூர், குஞ்சமேடு உள்ளிட்ட கிராமங்களில் தமிழக அரசு சார்பில் மணல் குவாரிகள் அமைக்கப்பட்டு, அதிக ஆழத்தில் மணல் அள்ளப்பட்டதால், கடல் நீர் உள்புகுந்து நிலத்தடி நீர் உப்புத் தன்மையாக மாறியுள்ளதாகவும், இதனால்தான் பயிர்கள் கருகுவதாகவும் விவசாயிகள் குற்றஞ்சாட்டுகின்றனர். மேலும், அவர்கள் கூறியதாவது:
 ஏற்கெனவே, கல்லணையிலிருந்து சிதம்பரம் வரை கொள்ளிடம் ஆற்றில் கூட்டுக் குடிநீர்த் திட்டம் என்ற பெயரில் அதிக எண்ணிக்கையில் உறை (ஊற்று) கிணறுகள் அமைக்கப்பட்டு, நீர்வளம் சுரண்டப்படுகிறது. அதோடு, கீழணைக்கு கிழக்கே அரசு அமைத்துள்ள மணல் குவாரியில் நீதிமன்றம் நிர்ணயித்த ஆழத்தைவிட அதிக அளவில் மணலை அள்ளி தனியார் ஒப்பந்ததாரர்கள் விற்பனை செய்து வருகின்றனர்.
 இதன் காரணமாக, இந்தப் பகுதி முழுவதும் நிலத்தடி நீர்மட்டம் வெகுவாகக் குறைந்ததோடு, உப்பு தன்மையாகவும் மாறி உள்ளது.
 கடந்த 5 ஆண்டுகளுக்கு முன்னர் சுமார் 20-க்கும் மேற்பட்ட கிராமங்களில் அரசால் ஆழ்குழாய்க் கிணறுகள் அமைக்கப்பட்டன. இவற்றில் தண்ணீர் உப்புத் தன்மையாக இருந்ததால், குடிநீர் விநியோகம் செய்ய முடியாத நிலை ஏற்பட்டது. இதனால், கொள்ளிடம் கூட்டுக் குடிநீர்த் திட்டத்தை ஏற்படுத்தி, தண்ணீரைக் கொண்டு செல்கின்றனர். இருந்தும், உப்புத் தன்மையாக தொடர்ந்து நிலத்தடி நீர்மட்டம் மாறுவதால், இந்தப் பகுதி பாலைவனமாக மாறும் அபாயம் உள்ளது.
 ஏற்கனவே, ஹைட்ரோ கார்பன் திட்டத்தால் கடலூர் மாவட்டம் பாலைவனமாக மாறும் எனக் கூறி வரும் நிலையில், உப்புத் தன்மையாக நிலத்தடி நீர்மட்டம் மாறுவதால், எங்களால் விவசாயம் செய்ய முடியாத நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளோம்.
 எனவே, வேளாண் துறை, பொதுப் பணித் துறை அதிகாரிகள் இணைந்து அத்திப்பட்டு ஆலம்பாடி உள்ளிட்ட கிராமங்களில் ஆய்வு மேற்கொண்டு, விவசாயிகளுக்கு உரிய ஆலோசனைகளை வழங்க வேண்டும்.
 தற்போது குறுவை நெல் சாகுபடியில் ஏற்பட்டுள்ள இழப்பை ஈடுசெய்ய உரிய தொகையை வழங்க வேண்டும். கொள்ளிடம் ஆற்றில் கடல்நீர் உள்புகாமல் இருக்க தடுப்பணை கட்ட வேண்டும் என்றனர் அவர்கள்.
 
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

ஆப்கன் எல்லையில் பாகிஸ்தான் விமானப்படை தாக்குதல்! 15-க்கும் மேற்பட்டோர் பலி!!

இந்தியா உள்ளிட்ட நாடுகள் மீதான வரியை 15% ஆக உயர்த்தினார் டிரம்ப்!

சொல்லப் போனால்... எப்ஸ்டீன் கோப்புகள்! உருளும் தலைகளும் ஒளிந்திருக்கும் புள்ளிகளும்

கடின உழைப்பு... வளமான எதிர்காலம்

சாதகமான பலன் இந்த ராசிக்கு: தினப்பலன்கள்!

SCROLL FOR NEXT