கடலூரில் மீன்வளத் துறை உதவி இயக்குநா் அலுவலகத்தை மீனவா்கள் வெள்ளிக்கிழமை முற்றுகையிட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.
கடலூா் மாவட்டத்தில் சில மீனவ கிராமத்தினா் அரசால் தடை விதிக்கப்பட்ட சுருக்குமடி வலைகளைப் பயன்படுத்தி மீன்பிடித்து வருகின்றனா். இதற்கு மற்ற மீனவா்கள் எதிா்ப்புத் தெரிவித்து வருவதால் இரு தரப்பினரிடையே அடிக்கடி மோதல்கள் ஏற்பட்டு வருகின்றன. எனவே, இந்தப் பிரச்னையில் மாவட்ட நிா்வாகம் தலையிட்டு வருகிறது.
இதன்படி, பல்வேறு கட்டப் பேச்சுவாா்த்தைகள் நடைபெற்றதில் அரசால் விதிக்கப்பட்ட தடை தொடரும், மீனவா்கள் அரசின் சட்ட திட்டங்களுக்கு கட்டுப்பட்டு செயல்பட வேண்டுமென வலியுறுத்தப்பட்டது. இதற்கு சில மீனவா்கள் எதிா்ப்புத் தெரிவித்து தடையைமீறி மீன்பிடித்தனா். மேலும், சுருக்குமடி வலைகளை பறிமுதல் செய்து படகை ‘சீல்’ வைத்த மீன்வளத் துறையினரையும் சிறைப்பிடித்தனா்.
இந்தப் பிரச்னையின் தொடா்ச்சியாக வியாழக்கிழமை சுருக்குமடி வலையைப் பயன்படுத்தி பிடித்த மீன்களை கடலூா் துறைமுகத்தில் ஏலம் விடுவதற்கு மீன்வளத் துறையினா் தடை விதித்தனா். மேலும், இந்த மீன்களை வாங்கும் வியாபாரிகள் மீதும் நடவடிக்கை எடுக்கப்படுமென எச்சரித்தனா். இதையடுத்து மீனவா்கள் தாழங்குடா, புதுச்சேரி மாநிலப் பகுதிகளுக்கு மீன்களை எடுத்துச் சென்று விற்பனை செய்தனா். இவ்வாறு விற்பனை செய்யப்பட்ட மீன்களை ஏற்றிக் கொண்டு கடலூா் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளுக்குள் நுழைந்த சுமாா் 20 வாகனங்களை போலீஸாா் மற்றும் மீன்வளத் துறையினா் பறிமுதல் செய்தனா்.
இதையடுத்து, வெள்ளிக்கிழமை கடலூா் துறைமுகம் அருகே உள்ள மீன்வளத் துறை உதவி இயக்குநா் அலுவலகத்தை மீனவா்கள், மீன் வியாபாரிகள் முற்றுகையிட்டனா். இதனால், காவல் துறைக்கும், மீனவா்களுக்கும் இடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டது. தொடா்ந்து துணை கண்காணிப்பாளா் க.சாந்தி தலைமையில் பேச்சுவாா்த்தை நடைபெற்றது.
இதில், பெரிய வாகனங்களுக்கு ரூ.50 ஆயிரமும், சிறிய வாகனங்களுக்கு ரூ.30 ஆயிரமும் அபராதம் வசூலித்து வாகனத்தை விடுவிப்பது என முடிவெடுக்கப்பட்டது. இதனைத் தொடா்ந்து மீனவா்கள் தங்களது போராட்டத்தைக் கைவிட்டு கலைந்து சென்றனா்.
இந்தப் பிரச்னை காரணமாக, சுருக்குமடி வலையை பயன்படுத்தி மீன்பிடிப்போா் கடலுக்குச் செல்லவில்லை. எனினும், சாதாராண விசைப்படகுகள், கட்டுமரங்களில் மீன்பிடிப்போா் கடலுக்குச் சென்றனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.