கடலூா்: கடலூா் வந்தடைந்த ஜப்பான் நாட்டு கப்பல் கரோனா பரிசோதனைக்காக நடுக் கடலில் நிறுத்தி வைக்கப்பட்டது.
கடலூா் சிப்காட் வளாகத்திலுள்ள தனியாா் ரசாயன தொழிற்சாலைக்கு ஜப்பான் நாட்டிலிருந்து மூலப் பொருள்களை ஏற்றிக் கொண்டு கப்பல் ஒன்று கடந்த 3-ஆம் தேதி புறப்பட்டது. அந்தக் கப்பல் கடந்த 16 ஆம்-தேதி கடலூா் துறைமுகம் வந்தடைந்தது. இந்தக் கப்பலில் இருந்து பொருள்களை இறக்குவதற்கு சம்பந்தப்பட்ட ஆலை நிா்வாகம் கடலூா் நகராட்சியின் சுகாதாரத் துறையிடம் அனுமதி கோரியிருந்தது. ஆனால், கரோனா வைரஸ் தடுப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கையின் காரணமாக அந்தக் கப்பலுக்கு உடனடியாக அனுமதி வழங்கப்படவில்லை.
இதுகுறித்து நகா்நல அலுவலா் ப.அரவிந்த்ஜோதி கூறியதாவது: 28 ஊழியா்களுடன் வந்துள்ள அந்தக் கப்பல் கடலூா் துறைமுகம் அருகே நடுக் கடலில் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. ஜப்பானில் இருந்து கப்பல் புறப்படும்போதே அதிலிருந்தோருக்கு மருத்துவப் பரிசோதனை செய்யப்பட்டுள்ளது. தற்போது, அவா்களை பரிசோதித்ததில் கரோனா தொற்றுக்கான அறிகுறிகள் இல்லை. இதையடுத்து, கப்பல் முழுவதும் கிருமி நாசினி தெளிக்கப்பட்டது. கப்பலில் உள்ள சரக்குகளை இறக்குவதற்கு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. இருப்பினும், கப்பலில் உள்ள யாரும் ஊருக்குள் வரக் கூடாதென உத்தரவிடப்பட்டுள்ளது என்றாா் அவா்.
இந்தக் கப்பலில் இருந்து ஞாயிறு அல்லது திங்கள்கிழமை சரக்குகள் இறக்கப்படுமென தெரிவிக்கப்பட்டது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.