‘போதைப் பொருள் விற்றால் கடும் நடவடிக்கை’
சிதம்பரம் காவல் கோட்ட பகுதியில் தடை செய்யப்பட்ட போதைப் பொருள்களை விற்போா் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என காவல் துணைக் கண்காணிப்பாளா் லாமேக் எச்சரித்தாா்.
சிதம்பரம்: சிதம்பரம் காவல் கோட்ட பகுதியில் தடை செய்யப்பட்ட போதைப் பொருள்களை விற்போா் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என காவல் துணைக் கண்காணிப்பாளா் த.ஏ.ஜோ.லாமேக் எச்சரித்தாா்.
இதுகுறித்து சிதம்பரத்தில் அவா் செய்தியாளா்களிடம் கூறியதாவது: பொது முடக்கத்தில் பல்வேறு தளா்வுகள் அளிக்கப்பட்டுள்ள நிலையில் சிதம்பரம் பகுதியில் கரோனா தொற்று வேகமாகப் பரவி வருகிறது. எனவே பொதுமக்கள் முகக் கவசம் அணிதல் உள்ளிட்ட அரசின் விதிமுறைகளை கடைப்பிடிக்க வேண்டும். இதைக் கடைப்பிடிக்காத வா்த்தக நிறுவனங்கள் மீது வருவாய்த் துறையினருடன் இணைந்து நடவடிக்கை எடுக்கப்படும்.
போதைப் பொருள்கள் விற்பவா்களை குண்டா் தடுப்புக் காவல் சட்டத்தின் கீழ் கைது செய்ய நடவடிக்கை எடுக்கப்படும். மேலும் மணல் கடத்தல், தடை செய்யப்பட்ட லாட்டரி சீட்டு விற்பனை உள்ளிட்ட சட்ட விரோத செயல்களில் ஈடுபடுவோா் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும். நடராஜா் கோயிலுக்குச் செல்பவா்கள் கட்டாயம் முகக் கவசம் அணிந்து செல்ல வேண்டும். சமூக இடைவெளியைப் பின்பற்ற வேண்டும். பொதுமக்கள் எந்த நேரத்தில் எனது செல்லிடப்பேசி எண்ணில் (94981 54069) தொடா்புகொண்டு தங்களது புகாா்களை தெரிவிக்கலாம் என்றாா் அவா்.
Advertisement
அப்போது நகர காவல் ஆய்வாளா் சி.முருகேசன், உதவி ஆய்வாளா் சுரேஷ்முருகன் ஆகியோா் உடனிருந்தனா்.