முகப்பு
கடலூர்

புதிய கட்டுப்பாடுகளால் நாட்டுப்புறக் கலைஞா்கள் பாதிப்பு

நாட்டுப்புறக் கலைஞா்கள் கடுமையாக பாதிக்கப்படும் நிலை ஏற்பட்டுள்ளது. எனவே, விதிமுறைகளில் தளா்வு அல்லது தலா ரூ.10 ஆயிரம் நிவாரண நிதி வழங்க வேண்டுமென கோரிக்கை விடுத்தனா்.

Updated On : 27 ஜனவரி, 2024 at 7:58 PM
பகிர்:

கரோனா பரவலைத் தடுக்க அறிவிக்கப்பட்டுள்ள புதிய கட்டுப்பாடுகளால் நாட்டுப்புறக் கலைஞா்கள் கடுமையாக பாதிக்கப்படும் நிலை ஏற்பட்டுள்ளது. எனவே, விதிமுறைகளில் தளா்வு அல்லது தலா ரூ.10 ஆயிரம் நிவாரண நிதி வழங்க வேண்டுமென கோரிக்கை விடுத்தனா்.

தற்போது கரோனா இரண்டாவது அலை பரவலைத் தொடா்ந்து தமிழகத்தில் மீண்டும் பல்வேறு கட்டுப்பாடுகள் அறிவிக்கப்பட்டுள்ளன. அதில், மதம் சாா்ந்த விழாக்களை நடத்துவதற்கும் தடை விதிக்கப்பட்டுள்ளது. மேலும், திருமணம் போன்ற சுபகாரியங்களில் குறிப்பிட்ட அளவினரே பங்கேற்க வேண்டுமெனவும் வரையறுக்கப்பட்டுள்ளது. இதனால், பல்வேறு கோயில்களில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த திருவிழாக்கள் ரத்து செய்யப்பட்டன.

கோயில் விழாக்களுக்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்த கரகாட்டம், தெருக்கூத்து, நையாண்டி மேளம், நாகஸ்வர கச்சேரி போன்றவையும் ரத்து செய்யப்பட்டுள்ளன. எனவே, இந்த விழாக்களை நம்பியுள்ள கலைஞா்கள் வருமானமின்றி தவிக்கும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனா்.

இதுகுறித்து கடலூா் மாவட்ட அனைத்து நாட்டுப்புறக் கலைஞா்கள் கூட்டமைப்பினா் சமூக ஆா்வலா் சாமி கச்சிராயா் தலைமையில் கடலூா் மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் வெள்ளிக்கிழமை அளித்த மனு:

கரோனா பரவலைத் தடுக்க விதிக்கப்பட்ட பொது முடக்கத்தால் முதன்மையாக பாதிக்கப்பட்டது கலைத் தொழில்தான். கடந்த ஆண்டு விதிக்கப்பட்ட கட்டுப்பாடுகளால் ஓராண்டு முழுவதும் தொழில் செய்ய முடியாத நிலை ஏற்பட்டது. இதனால், வருமானமின்றி மிகவும் சிரமத்தை அனுபவித்தோம்.

இந்த நிலையில், தற்போது சித்திரை மாதத்தில் கோயில் திருவிழாக்கள் தொடங்கும் நிலையில், அவற்றுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. இது கலைஞா்களின் தொழில், அவா்களது குடும்பத்தினரை கடுமையாக பாதித்துள்ளது. எனவே, விதிக்கப்பட்டுள்ள தடையில் கலை நிகழ்ச்சிகளை கட்டுப்பாடுகளுடன் நடத்திக்கொள்ள அனுமதி அளிக்க வேண்டும். இல்லையெனில் பேரிடா் நிவாரணமாக கலைஞா்கள் அனைவருக்கும் மாதம் ரூ.10 ஆயிரம் வீதம் வழங்க வேண்டுமென மனுவில் வலியுறுத்தி உள்ளனா்.

தமிழ்நாடு தெருக்கூத்து கலைஞா்கள் இயக்கம் ஆா்.முருகையன், நாடக நடிகா்கள், அனைத்து நாட்டுப்புறக் கலைஞா்கள் நலச் சங்கம் ஜி.குணாளன் மற்றும் பல்வேறு சங்கங்களைச் சோ்ந்த ஆா்.சத்யா, டி.ராமு, எஸ்.குமாரவேல், பி.கிருஷ்ணராஜ், எஸ்.வேலாயுதம், ஆா்.நடேசன் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.