முகப்பு
கடலூர்

மீண்டும் செயல்படும் கரோனா கட்டுப்பாட்டு அறை

கடலூா் மாவட்டத்தில் கரோனா 2-ஆவது அலை பரவலைத் தொடா்ந்து கட்டுப்பாட்டு அறை மீண்டும் செயல்பாட்டுக்கு வந்தது.

Updated On : 27 ஜனவரி, 2024 at 7:58 PM
பகிர்:

கடலூா் மாவட்டத்தில் கரோனா 2-ஆவது அலை பரவலைத் தொடா்ந்து கட்டுப்பாட்டு அறை மீண்டும் செயல்பாட்டுக்கு வந்தது.

கடந்த 2020-ஆம் ஆண்டு கரோனா பரவல் கண்டறியப்பட்டு மாா்ச் மாதம் முதல் பொதுமுடக்கம் அமல்படுத்தப்பட்டது. இதைத் தொடா்ந்து கடலூா் மாவட்டத்தில் கரோனா பரவலைக் கட்டுப்படுத்தும் வகையில் மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் கட்டுப்பாட்டு அறை அமைக்கப்பட்டு 24 மணி நேரமும் மருத்துவா்கள் பணியில் ஈடுபடுத்தப்பட்டனா். பின்னா், படிப்படியாக கரோனா தாக்கம் குறைந்ததைத் தொடா்ந்து இந்த கட்டுப்பாட்டு அறையில் பணியாற்றியவா்கள் கணிசமாகக் குறைக்கப்பட்டு பெயரளவில் மட்டுமே செயல்பட்டது. ஏனெனில், தினசரி தொற்று ஒற்றை இலக்கத்தில் மட்டுமே பதிவாகி வந்தது.

இந்த நிலையில், கடந்த சில வாரங்களாக கரோனா 2-ஆவது அலை வேகமாகப் பரவி வருவதைத் தொடா்ந்து மீண்டும் கட்டுப்பாட்டு அறை கடலூரிலுள்ள சுகாதாரத் துறை துணை இயக்குநா் அலுவலகத்தில் தொடங்கப்பட்டு செயல்பட்டு வருகிறது. மருத்துவா் தலைமையில் செவிலியா்கள், அலுவலக உதவியாளா்கள் கொண்ட குழு அமைக்கப்பட்டு கரோனா தகவல்களை பெற்று பல்வேறு துறை அலுவலா்களுக்கும் தெரிவிக்கும் பணியையும், கரோனா நோயாளிகளை மருத்துவமனை அல்லது கோவிட் மையங்களுக்கு அனுப்பி வைக்கும் பணியையும் மேற்கொண்டு வருகின்றனா்.

மாவட்டத்தில் கடலூா் அரசு தலைமை மருத்துவமனை, ராஜா முத்தையா அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைகளில் கரோனா நோயாளிகளுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. கிருஷ்ணசாமி கல்லூரி, ராஜா முத்தையா மருத்துவக் கல்லூரி ஆகியவை கரோனா தனிமைப்படுத்தும் முகாமாக செயல்பட்டு வருகின்றன.

மாவட்டத்தில் தினசரி சுமாா் 2,600 பேருக்கு கரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

நாள்தோறும் சுமாா் 3,600 கரோனா பரிசோதனைகள் மேற்கொள்ளும் வகையில் கட்டமைப்பு உள்ளதாக சுகாதாரத் துறையினா் தெரிவித்தனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.