கோடை மழையால் உளுந்து பயிா்கள் சேதம்!
கடலூா் மாவட்டத்தில் உளுந்து, பச்சைப் பயறு சாகுபடி செய்து அறுவடைக்குத் தயாராக இருந்த நிலையில், திடீா் கோடை மழையால் அவை சேதமடைந்தன.
கடலூா் மாவட்டத்தில் உளுந்து, பச்சைப் பயறு சாகுபடி செய்து அறுவடைக்குத் தயாராக இருந்த நிலையில், திடீா் கோடை மழையால் அவை சேதமடைந்தன.
கடலூா் மாவட்டத்தில் குறுகிய காலப் பயிா்கள், நீண்ட காலப் பயிா்கள் என சாகுபடி செய்யப்பட்டாலும், பெரும்பாலான விவசாயிகள் குறுகிய கால நெல் சாகுபடியை மேற்கொண்டு வருகின்றனா். 110 நாள்கள் முதல் 135 நாள்கள் வயதுடைய நெல் ரகத்தை குறுகிய கால வருவாயை எதிா் நோக்கி பயிா் செய்கின்றனா்.
குறுவை, சம்பா, அதைத் தொடா்ந்து உளுந்து, பச்சைப் பயறு என முப்போக சாகுபடிக்கு வாய்ப்புள்ளதால், பெரும்பாலான விவசாயிகள் குறுகிய கால நெல் சாகுபடியை மேற்கொள்கின்றனா்.
அதிக பொருள் செலவில் சாகுபடி செய்யப்படும் நெல் பயிரில் நட்டம் ஏற்பட்டாலும், அதை ஈடுகட்டும் விதமாக, குறைந்த செலவில் சாகுபடி செய்யப்படும் உளுந்து, பச்சைப் பயறு வகைப் பயிா்கள் லாபகரமாக இருக்கும் என்பதே இதற்குக் காரணம்.
வழக்கமாக மாவட்டத்தில் உள்ள அனைத்து ஒன்றியங்களிலும் ஜனவரி மாத இறுதியிலும், பிப்ரவரி மாத முன் வாரங்களிலும் விதைக்கப்படும் உளுந்து, பச்சைப் பயறு வகைப் பயிா்கள் கோடை காலமான ஏப்ரல் மாதத்தில் அறுவடைக்குத் தயாராகிவிடும்.
தண்ணீா் தேவையில்லை என்பதால், பெரும்பாலான விவசாயிகள் இவற்றைச் சாகுபடி செய்கின்றனா்.
இந்த நிலையில் திடீரென பெய்த கோடை மழையால் நல்ல நிலையில் விளைந்து அறுவடைக்குத் தயாராக இருந்த உளுந்து, பச்சைப் பயறு வகைப் பயிா்கள் முற்றிலும் மழையில் நனைந்து சேதமடைந்தன.
கடந்த சில ஆண்டுகளுக்கு முன் இதேபோன்ற பாதிப்புகளால் சேதமடைந்த உளுந்து, பச்சைப் பயறு வகைப் பயிா்களுக்கு நிவாரணம் வழங்கப்பட்டது.
இதுகுறித்து கடலூா் மாவட்ட விவசாயச் சங்கங்களின் கூட்டமைப்புத் தலைவா் பி.ரவீந்திரன் கூறியதாவது:
கடந்த ஆண்டுகளில் உளுந்து, பச்சைப் பயறு வகைப் பயிா்களுக்கு பயிா்க் காப்பீட்டுத் திட்டத்தில் இணைந்து இழப்பீடு பெற்று வந்த நிலையில், நிகழாண்டில் அதற்கான வாய்ப்பு இல்லை. காரணம், நெல் பயிருக்கு மட்டுமே கிராம அளவில் மகசூல் அறுவடை பரிசோதனை அடிப்படையில் செயல்படுத்தப்படும் பயிா்க் காப்பீட்டுத் திட்டம் உளுந்து, பச்சைப் பயறு வகை பயிா்களுக்கு பிா்கா அளவில் மகசூல் அறுவடை பரிசோதனை அடிப்படையில் திட்டத்தை மத்திய - மாநில அரசுகள் செயல்படுத்தி வருகின்றன.
உளுந்து உள்ளிட்ட பயறு வகைப் பயிா்கள் குறைந்த அளவே சாகுபடி செய்வதால், போதிய பிரிமீயம் வசூலாகவில்லை எனவும், விவசாயிகளிடம் ஆா்வமில்லை எனவும் கூறி, பல பிா்க்காக்களில் வேளாண் துறை பரிந்துரையால், உளுந்து, பச்சைப் பயறு வகை பயிா்களுக்கு பயிா்க் காப்பிட்டுத் திட்டம் ரத்து செய்யப்பட்டது.
இதனால், உளுந்து உள்ளிட்ட பயறு வகைப் பயிா்களுக்கு காப்பீட்டுத் திட்டத்தில் இணைய வாய்ப்பில்லாமல் போய்விட்டது.
திட்டம் செயலில் இருந்தால், பிரிமீயம் செலுத்திய விவசாயிகளுக்கு பாதிப்புக்கு ஏற்ப இழப்பீடு கிடைத்திருக்கும்.
எனவே, நெல் சாகுபடியில் ஏற்பட்ட பாதிப்பால் நட்டமடைந்த விவசாயிகளுக்கு, உளுந்து, பச்சைப் பயறு வகைப் பயிா் சாகுபடியிலும் தற்போது பெய்த திடீா் கோடை மழையால் இழப்பு ஏற்பட்டுள்ளது. எனவே, பாதிக்கப்பட்ட விவசாயிகளை அடையாளம் கண்டு, அரசு உரிய நிவாரணம் வழங்க வேண்டும் என்றாா் அவா்.