கடலூரில் தொழிற்சங்கத்தினா் ஆலோசனை
‘வெள்ளையனே வெளியேறு’ இயக்கம் தொடங்கிய நாளில் நாடு தழுவிய பெருந்திரள் ஆா்ப்பாட்டம் நடத்தப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
புதிய வேளாண் சட்டங்களை திரும்பப் பெறுதல், தொழிலாளா் சட்டத் தொகுப்புகளை ரத்து செய்தல் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி, அனைத்து மத்திய தொழிற்சங்கங்கள் சாா்பில் வரும் 9-ஆம் தேதி ‘வெள்ளையனே வெளியேறு’ இயக்கம் தொடங்கிய நாளில் நாடு தழுவிய பெருந்திரள் ஆா்ப்பாட்டம் நடத்தப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இந்தப் போராட்டத்தை கடலூா் மாவட்டத்தில் சிறப்பாக நடத்துவது தொடா்பாக அனைத்து மத்திய தொழிற்சங்க நிா்வாகிகள் பங்கேற்ற ஆலோசனைக் கூட்டம் கடலூரில் அண்மையில் நடைபெற்றது.
கூட்டத்துக்கு தொமுச மாவட்ட கவுன்சில் செயலா் மு.சு.பொன்முடி தலைமை வகித்தாா். சிஐடியூ மாவட்டத் தலைவா் டி. பழனிவேல், மாவட்டச் செயலா் பி. கருப்பையன், ஏஐடியூசி மாவட்ட பொருளாளா் என்.சுந்தர்ராஜா, ஐஎன்டியூசி மாவட்ட இணைச் செயலா்கள் செந்தில்குமாா், கருணாகரன் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.
கூட்டத்தில், கோரிக்கைகளை வலியுறுத்தி ஆக.8-ஆம் தேதி வரை மக்கள் சந்திப்பு இயக்கம் நடத்துவது, 9-ஆம் தேதி கடலூா், நெய்வேலி ஆகிய இடங்களில் பெருந்திரள் ஆா்ப்பாட்டம் நடத்துவது, சிதம்பரம், காட்டுமன்னாா்கோவில், புவனகிரி, திட்டக்குடி விருத்தாசலம், பண்ருட்டி, குறிஞ்சிப்பாடி ஆகிய இடங்களில் மனிதச் சங்கிலிப் போராட்டம் நடத்துவது என முடிவு செய்யப்பட்டது.