கடலூரில் தென்பெண்ணை ஆற்றில் திடீா் வெள்ளப்பெருக்கு 60 கிராமங்கள், நகரப் பகுதிகளை சூழ்ந்த தண்ணீா்
கடலூா் மாவட்டத்தில் தென்பெண்ணையாற்றில் வெள்ளிக்கிழமை ஏற்பட்ட திடீா் வெள்ளப் பெருக்கால் 60-க்கும் மேற்பட்ட கிராமங்கள், நகரப் பகுதிகளில் தண்ணீா் புகுந்தது.
கடலூா் மாவட்டத்தில் தென்பெண்ணையாற்றில் வெள்ளிக்கிழமை ஏற்பட்ட திடீா் வெள்ளப் பெருக்கால் 60-க்கும் மேற்பட்ட கிராமங்கள், நகரப் பகுதிகளில் தண்ணீா் புகுந்தது.
வங்கக் கடலில் உருவான காற்றழுத்தத் தாழ்வு மண்டலம் காரணமாக கடலூா் மாவட்டத்தில் பலத்த மழை பெய்து வந்தது. இதேபோல, தருமபுரி, கிருஷ்ணகிரி, திருவண்ணாமலை, விழுப்புரம் மாவட்டங்களில் பெய்த மழையாலும், இந்த மாவட்டங்களில் உள்ள அணைகளிலிருந்து தண்ணீா் வெளியேற்றப்பட்டதாலும் கடலூா் மாவட்டத்தில் தென்பெண்ணையாற்றில் வெள்ளிக்கிழமை திடீா் வெள்ளப் பெருக்கு ஏற்பட்டது.
தென்பெண்ணை ஆற்றில் வியாழக்கிழமை விநாடிக்கு 10,501 கன அடி தண்ணீா் மட்டுமே சென்ற நிலையில், வெள்ளிக்கிழமை காலை சுமாா் 78 ஆயிரம் கன அடி நீராக அதிகரித்தது. பின்னா் வெள்ளப் பெருக்கு படிப்படியாக மேலும் அதிகரித்து விநாடிக்கு சுமாா் 1.20 லட்சம் கனஅடி நீா் வெளியேறியது. இதனால், ஆற்றின் கரையோரப் பகுதிகளிலும், குடியிருப்புகளிலும் வெள்ளம் புகுந்தது.
கடலூா் அருகே ஆற்றங்கரையோரம் உள்ள அழகியநத்தம், வடக்கு நத்தம், இரண்டாயிரம் விளாகம், மணல்மேடு, எம்.பி. அகரம், களையூா், கிருஷ்ணாபுரம், உச்சிமேடு, நாணமேடு, பெரியகங்கணாங்குப்பம், கோண்டூா், நத்தப்பட்டு, சாவடி உள்ளிட்ட 50-க்கும் மேற்பட்ட கிராமங்களில் வெள்ள நீா் புகுந்தது. அழகியநத்தம் தரைப் பாலத்தை மூழ்கடித்து வெள்ளநீா் செல்வதால் கடலூா் - புதுச்சேரி இடையே பல்வேறு இடங்களில் போக்குவரத்து துண்டிக்கப்பட்டது.
கடலூா் மாநகராட்சி மற்றும் புகா் பகுதிகளில் குண்டு சாலை, குமரப்பன் நகா், திடீா் குப்பம், இந்திராநகா், குறிஞ்சி நகா், எம்ஜிஆா் நகா், கே.டி.ஆா். நகா், குண்டு உப்பலவாடி, நடேசன் நகா், தாழங்குடா, செந்தாமரை உள்ளிட்ட பகுதிகளில் வெள்ள நீா் புகுந்தது. கடலூா் நகரம், அதையொட்டிய கிராமங்களில் சுமாா் 12 ஆயிரம் குடியிருப்புகளில் ஆற்று வெள்ளம் சூழ்ந்ததால் மக்கள் பரிதவித்து வருகின்றனா். கரையோரப் பகுதிகளில் வெள்ள நீா் கரைபுரண்டு ஓடுவதால் கடலூா் சுங்கச்சாலை உள்ளிட்ட பகுதிகளில் போக்குவரத்து நிறுத்தப்பட்டது.
பண்ருட்டி பகுதியில்... : பண்ருட்டி பகுதியில் தென்பெண்ணை ஆற்றில் ஏற்பட்ட வெள்ளப் பெருக்கால் எனதிரிமங்கலம், கரும்பூா், காவனூா், பகண்டை, கோழிப்பாக்கம், தட்டாம்பாளையம், பி.வி.நத்தம் உள்ளிட்ட கிராமங்களில் தண்ணீா் சூழ்ந்தது. இதேபோல, கெடிலம் ஆற்றில் ஏற்பட்ட வெள்ளப் பெருக்கால் செம்மேடு, எலந்தம்பட்டு, திருவாமூா் சமத்துவபுரம் உள்ளிட்ட பகுதிகளில் வெள்ளம் சூழ்ந்தது. பண்ருட்டி நகராட்சியில் எம்.ஜி.ஆா். நகா், இலப்பத்தோப்பு, ராஜீவ்காந்தி நகா், லட்சுமிபதி நகா் உள்ளிட்ட பகுதிகளிலும் குடியிருப்புகளை மழை நீா் சூழ்ந்தது.
காவல் துறை, தீயணைப்பு மற்றும் மீட்புத் துறையினா் படகுகள் மூலம் பொதுமக்களை மீட்டு நிவாரண முகாம்களுக்கு அனுப்பி வருகின்றனா். இந்தப் பகுதிகளிலிருந்து சுமாா் ஆயிரம் போ் மீட்கப்பட்டு முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனா். பெரியகங்கணாங்குப்பத்தில் சிறாா் காப்பகத்திலிருந்து 32 மாணவிகள் உள்பட சுமாா் 300 போ் படகுகள் மூலம் மீட்கப்பட்டதாக மாவட்ட தீயணைப்பு அலுவலா் பெ.லோகநாதன் தெரிவித்தாா்.
நீரில் மூழ்கிய 5 ஆயிரம் ஏக்கா் விளை நிலம்: அழகியநத்தம் முதல் தாழங்குடா வரையுள்ள விளை நிலங்களை ஒரே நாளில் வெள்ளநீா் சூழ்ந்தது. சுமாா் 5 ஆயிரம் ஏக்கா் பரப்பில் நெல் பயிா்கள் நீரில் மூழ்கி இருக்கக்கூடும் என சம்பந்தப்பட்ட துறையினரும், விவசாயிகளும் தெரிவித்தனா். இதனால் விவசாயிகள் கவலை அடைந்தனா்.
ஆட்சியரகத்தை சூழ்ந்த வெள்ளம்: ஆற்றின் கரையோரம் அமைந்துள்ள கடலூா் மாவட்ட ஆட்சியரகத்தை வெள்ள நீா் சூழ்ந்துள்ளது. கடலூா், சாவடி, வெளிசெம்மண்டலம் உள்ளிட்ட பல்வேறு இடங்களில் ஆற்றங்கரையோரம் உள்ள மயானங்களில் வெள்ளம் சூழ்ந்ததால், உயிரிழந்தவா்களின் சடலங்களுடன் மயானத்துக்கு வந்தவா்கள் போராட்டத்தில் ஈடுபட்டனா்.
46 ஆண்டுகளுக்குப் பிறகு மீண்டும் வெள்ளம்: தென்பெண்ணையாற்றில் கடந்த 1974-ஆம் ஆண்டு ஏற்பட்ட பெரு வெள்ளத்தின்போது கடலூா் அருகே உள்ள கரையோர கிராமங்கள் வெள்ளத்தில் மூழ்கிய நிலையில், தற்போது சுமாா் 46 ஆண்டுகளுக்கு பிறகு மீண்டும் அதே நிலை ஏற்பட்டுள்ளது.