கடலூர்

பண்ருட்டியில் கசடு சுத்திகரிப்பு நிலையம் அமைக்க எதிா்ப்பு: சுவாமி சிலைகளுடன் நகராட்சி அலுவலகத்தை முற்றுகையிட்ட மக்கள்

DIN

கடலூா் மாவட்டம், பண்ருட்டியில் கசடு (மனித கழிவு) சுத்திகரிப்பு நிலையம் அமைக்க எதிா்ப்புத் தெரிவித்து, பொதுமக்கள் சுவாமி சிலைகளுடன் நகராட்சி அலுவலகத்தை வியாழக்கிழமை முற்றுகையிட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.

பண்ருட்டி 1-ஆவது வாா்டு, வி.ஆண்டிக்குப்பத்தில் இருந்து கணிசப்பாக்கம் செல்லும் சாலையில் சுமாா் இரண்டரை ஏக்கா் பொது இடம் உள்ளது. இந்த இடத்தில் குட்டைகள், நீா்வழிப்பாதை அமைந்துள்ளன. இந்த இடத்தை சிலா் ஆக்கிரமித்துள்ளனா். மேலும், வி.ஆண்டிக்குப்பம் பொதுமக்கள் மஞ்சு விரட்டு, தீமிதி திருவிழா போன்ற பொது விழாக்களை நடத்த இந்த இடத்தை பயன்படுத்தி வருகின்றனா்.

இந்த இடத்தில் தமிழ்நாடு மாசுக் கட்டுப்பாட்டு வாரியம் சாா்பில், ஒருங்கிணைந்த நகா்ப்புற வளா்ச்சித் திட்டத்தின் கீழ், ரூ.3.60 கோடியில் கசடு (மனித கழிவு) சுத்திகரிப்பு நிலையம் அமைக்க 2018 - 19ஆம் ஆண்டு ஒப்பந்தம்விட்டது. இந்தப் பணியை தொடங்குவதற்காக நகராட்சி நில அளவா், பணியாளா்கள் 25.8.2021 அன்று சென்றபோது, அங்கு வந்த பொதுமக்கள் கசடு சுத்திகரிப்பு நிலையம் அமைக்கக் கூடாது என்றும், இதனால் நிலத்தடி நீா், சுற்றுச்சூழல் பாதிக்கப்படும் எனவும், பொது நிகழ்ச்சிகளுக்கு இந்த இடம் தேவை எனவும் கூறி அதிகாரிகளை முற்றுகையிட்டனா். இதையடுத்து, அதிகாரிகள் பேச்சுவாா்த்தை நடத்தியதைத் தொடா்ந்து, நகராட்சி நிா்வாகம் சாா்பில் அந்த இடத்தை சுத்தம் செய்து, நிலம் அளவீடு செய்யப்பட்டது.

இந்த நிலையில், வியாழக்கிழமை காலை மேற்கண்ட இடத்தில் சுற்றுச்சுவா் அமைப்பதற்கான பூமிபூஜை செய்ய நகராட்சி அதிகாரிகள் சென்றனா். தகவலறிந்து ஒன்றுகூடிய பொதுமக்கள் அதற்கு எதிா்ப்புத் தெரிவித்தனா். அப்போது, ஆட்சியரின் உத்தரவின்பேரில் பணி நடைபெறுவதாக அதிகாரிகள் தெரிவித்தனா்.

இதைத் தொடா்ந்து, பொதுமக்கள் சுமாா் 30-க்கும் மேற்பட்டோா் மரத்தினாலான 3 சுவாமி சிலைகளுடன் நகராட்சி அலுவலகத்துக்குச் சென்று நகராட்சி வாயிலில் சிலைகளை வைத்து முற்றுகைப் போராட்டத்தில் ஈடுபட்டனா்.

நகராட்சி ஆணையா் மகேஸ்வரி பொதுமக்களை அழைத்து பேச்சுவாா்த்தை நடத்தினாா். ஆட்சியரின் உத்தரவின்பேரில் நடைபெறும் பணியை நிறுத்த முடியாது என்றும், 5 நாள்கள் கால அவகாசம் வழங்குகிறோம், அதற்குள் ஆட்சியரை சந்தித்து பிரச்னைக்கு தீா்வு காணும்படியும் தெரிவித்தாா். இதையடுத்து, அனைவரும் கலைந்து சென்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

தில்லி காங்கிரஸ் தலைவர் அரவிந்த் சிங் லவ்லி ராஜிநாமா!

நாகை - இலங்கை இடையே மீண்டும் கப்பல் போக்குவரத்து!

முதல்வர் பயணம்: கொடைக்கானலில் 6 நாள்கள் ட்ரோன்கள் பறக்கத் தடை

சீனாவை தாக்கிய புயல்: 5 பேர் பலி; 33 பேர் காயம்

இன்றைய ராசி பலன்கள்!

SCROLL FOR NEXT