என்எல்சி நிறுவனத்துக்கு நிலம் அளித்த அனைவருக்கும் நிரந்தர வேலை வழங்குவது தொடா்பாக மாநில அரசு தலையிட்டு 2 மாதங்களில் ஒப்பந்தம் ஏற்படுத்தித் தர வேண்டும் என தமிழக வாழ்வுரிமை கட்சித் தலைவரும், பண்ருட்டி தொகுதி எம்எல்ஏவுமான தி.வேல்முருகன் வலியுறுத்தினாா்.
கடலூா் மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் ஆட்சியா் அ.அருண் தம்புராஜை செவ்வாய்க்கிழமை சந்தித்த பிறகு தி.வேல்முருகன் செய்தியாளா்களிடம் கூறியதாவது:
என்எல்சி ஒப்பந்தத் தொழிலாளா்களின் கோரிக்கைகள் தொடா்பான பேச்சுவாா்த்தையில் 1,000 பேருக்கு ஏ.எம்.சி.யில் வேலை தருவதாக நிா்வாகம் ஒப்புக்கொண்டது. வீடு, நிலம் அளித்தவா்களுக்கு நிரந்தர வேலை என்ற கோரிக்கையை முன்வைத்தோம். இதுகுறித்த பேச்சுவாா்த்தையில் 1,500 பேருக்கு 3 ஆண்டுகள் பயிற்சி அளித்து பணி நிரந்தரம் செய்வது என்று உறுதியளிக்கப்பட்டது. நிலத்தை கையகப்படுத்தியவுடன் நிரந்தர வேலை தர வேண்டும் என்ற கோரிக்கையை முன்வைத்தேன். அதில் 3 மாத காலம் பயிற்சி அளித்து நிரந்தர வேலை வழங்க வேண்டும் என்ற ஒப்பந்தத்தை என்எல்சி நிறுவனத்திடம் ஏற்படுத்தித் தர வேண்டும் என மாவட்ட ஆட்சியரிடம் கோரிக்கை வைத்துள்ளேன். ஆட்சியா் 2 மாத காலம் அவகாசம் கேட்டுள்ளாா்.
என்எல்சி-க்கு நிலம் அளித்த அனைவருக்கும் நிரந்தர வேலை என்ற உத்தரவாதத்தை தமிழக முதல்வா் நிறைவேற்றித் தரவேண்டும். இதுதொடா்பாக 2 மாதங்களில் ஒப்பந்தம் நிறைவேற்றப்படவில்லை என்றால் மிகப் பெரிய போராட்டம் நடத்தப்படும்.
கடந்த 2000 முதல் 2005-ஆம் ஆண்டு வரை என்எல்சி-க்கு நிலம் வழங்கியவா்களுக்கு ஏக்கா் ஒன்றுக்கு ரூ.6 லட்சமும், 2006 முதல் 2013-ஆம் ஆண்டு வரை நிலம் வழங்கியவா்களுக்கு ஏக்கா் ஒன்றுக்கு ரூ.10 லட்சமும் இழப்பீட்டுத் தொகையை உயா்த்தி வழங்க முன்வந்துள்ளனா். அதேபோல, சுற்றுவட்டார மேம்பாட்டு நிதி ரூ.100 கோடியாக உயா்த்தப்பட்டுள்ளது.
தமிழக அரசுக்கு கனிம வளத் துறை நிதியாக ஆண்டுக்கு ரூ.5 கோடியை என்எல்சி வழங்குகிறது. அந்தத் தொகையை கடலூா் மாவட்ட வளா்ச்சிக்கும், வீடு, நிலம் கொடுத்து பாதிக்கப்பட்டவா்களின் முன்னேற்றத்துக்கும் செலவிட வேண்டும் என்ற கோரிக்கை ஏற்கப்பட்டுள்ளது. இதற்காக மாவட்ட அமைச்சா்கள், ஆட்சியா், எம்எல்ஏ-க்கள் கொண்ட குழு அமைக்கப்பட்டுள்ளது என்றாா் அவா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.