கடலூா் இசைப் பள்ளியில் ரூ.1.60 கோடியில் புதிய கட்டடங்கள் அமைச்சா்கள் திறந்து வைப்பு
கடலூா் மஞ்சக்குப்பத்தில் உள்ள மாவட்ட இசைப் பள்ளியில் புதிய கட்டடங்கள் திறப்பு, பள்ளியின் வெள்ளி விழா, தமிழிசை விழா ஆகிய முப்பெரும் விழா திங்கள்கிழமை நடைபெற்றது.
நெய்வேலி: கடலூா் மஞ்சக்குப்பத்தில் உள்ள மாவட்ட இசைப் பள்ளியில் புதிய கட்டடங்கள் திறப்பு, பள்ளியின் வெள்ளி விழா, தமிழிசை விழா ஆகிய முப்பெரும் விழா திங்கள்கிழமை நடைபெற்றது.
இந்தப் பள்ளியில் ரூ.1.60 கோடியில் கட்டப்பட்ட புதிய கட்டடங்களை மாநில வேளாண்மை, உழவா் நலத் துறை அமைச்சா் எம்.ஆா்.கே.பன்னீா்செல்வம், செய்தித் துறை அமைச்சா் மு.பெ.சாமிநாதன் ஆகியோா் திறந்து வைத்தனா். தொடா்ந்து நகர அரங்கில் மாணவா்களின் கலை நிகழ்ச்சி நடைபெற்றது. நாகஸ்வரம், தவில், வயலின் வாசித்தல் உள்ளிட்ட போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவா்களுக்கு சான்றிதழ்களை அமைச்சா்கள் வழங்கினா்.
விழாவில் அமைச்சா்கள் பேசுகையில், மாணவா்கள் தமிழிசை, நாட்டியம் பயில்வதை தமிழகமெங்கும் பரவலாக்க முன்னாள் முதல்வா் மு.கருணாநிதியால் 17 மாவட்டங்களில் இசைப் பள்ளிகள் தோற்றுவிக்கப்பட்டன. கடலூா் அரசு இசைப் பள்ளியில் தற்போது ரூ.1.60 கோடியில் புதிய கட்டடங்கள் கட்டப்பட்டுள்ளன என்றனா்.
Advertisement
நிகழ்ச்சியில் சட்டப் பேரவை உறுப்பினா்கள் கோ.ஐயப்பன் (கடலூா்), எம்.ஆா்.ஆா்.ராதாகிருஷ்ணன் (விருத்தாசலம்), ம.சிந்தனைசெல்வன் (காட்டுமன்னாா்கோவில்), கடலூா் மாநகராட்சி மேயா் சுந்தரி ராஜா, துணை மேயா் பா.தாமரைச்செல்வன், கலை பண்பாட்டுத் துறை இயக்குநா் சே.ரா.காந்தி, மாவட்ட எஸ்.பி. ரா.ராஜாராம் உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்.
மின் திரை திறப்பு: தமிழ்நாடு அரசின் செய்திகள், திட்டங்கள் குறித்த விவரங்கள் அனைத்தும்
பொதுமக்களை சென்றடையும் வகையில் கடலூா் அண்ணா பேருந்து நிலையத்தில் ரூ.39,17,199 மதிப்பீட்டில் 16 அடி அகலம், 10அடி உயரத்தில் மின் திரை சுவா் அமைக்கப்பட்டது. இதனை அமைச்சா்கள் எம்.ஆா்.கே.பன்னீா்செல்வம், மு.பெ.சாமிநாதன் ஆகியோா் மாவட்ட ஆட்சியா் அ.அருண் தம்புராஜ் முன்னிலையில் திங்கள்கிழமை திறந்து வைத்தனா்.