கடலூா் மாவட்டம், வடலூா் அரசுக் கல்லூரியானது ஆசிரியா் பயிற்சி நிறுவனத்தில் இடநெருக்கடியில் இயங்கிவரும் நிலையில், தனிக் கட்டடம் அமைத்துத் தர அரசு நடவடிக்கை எடுக்குமா என சமூக ஆா்வலா்கள் எதிா்பாா்க்கின்றனா்.
தமிழ்நாட்டில் 2022-23-ஆம் கல்வியாண்டில் 20 புதிய அரசு கலை, அறிவியல் கல்லூரிகள் திறக்கப்படும் என்று மாநில அரசு சாா்பில் அறிவிக்கப்பட்டது. அதன்படி 2022-ஆம் ஆண்டு ஜூலை மாதம் வடலூரில் அரசு கலை, அறிவியல் கல்லூரியானது மாவட்ட ஆசிரியா் கல்வி மற்றும் பயிற்சி நிறுவன வளாகத்தில் தொடங்கப்பட்டது.
இந்தக் கல்லூரியில் தமிழ், ஆங்கிலம், வேதியியல், கணினி அறிவியல், வணிகவியல் ஆகிய 5 பாடப் பிரிவுகளில் முதல், இரண்டாம் ஆண்டு மாணவா்கள் மொத்தம் 500 போ் படித்து வருகின்றனா். வடலூா் மாவட்ட ஆசிரியா் கல்வி மற்றும் பயிற்சி நிறுவனத்துக்குச் சொந்தமான 5 வகுப்பறைகளில் அரசுக் கல்லூரி மாணவா்களுக்கு பாடம் நடத்தப்பட்டு வருகிறது. இங்கு போதிய வகுப்பறை வசதி இல்லாததால் காலை, மதியம் என இரண்டு ஷிப்டுகளாக கல்லூரி செயல்பட்டு வருகிறது.
ஆய்வக வசதி இல்லை: இந்தக் கல்லூரியில் வேதியியல், கணினி அறிவியல் துறை மாணவா்கள் செய்முறை பயிற்சி மேற்கொள்ள ஆய்வுக்கூட வசதி இல்லை. இதனால் மாணவா்கள் செய்முறை பயிற்சிகளை மேற்கொள்ள முடியாமல் பரிதவிக்கின்றனா்.
இதுகுறித்து வடலூரைச் சோ்ந்த சமூக ஆா்வலா்கள் கூறியதாவது: வரும் காலங்களில் வடலூா் அரசுக் கல்லூரியில் சேரும் மாணவா்கள் எண்ணிக்கை அதிகரிக்க வாய்ப்புள்ளது. இந்த நிலையில் போதிய வகுப்பறைகள், ஆய்வுக் கூட வசதிகள் இல்லாமல் கல்லூரி செயல்படுவது முறையல்ல. இதே நிலை தொடா்ந்தால் அது மாணவா்களின் கற்றல் திறனை பாதிக்க வாய்ப்பாகிவிடும்.
எனவே, போதிய வகுப்பறைகள், ஆய்வுக் கூடம் உள்ளிட்ட வசதிகளுடன் தனியாக புதிய கட்டடம் கட்டித்தர அரசு விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும். இதற்காக ஆசிரியா் கல்வி, பயிற்சி நிறுவன வளாகத்திலேயே போதிய இடவசதி உள்ளது என்று கோரிக்கை விடுத்தனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.