முகப்பு
கடலூர்

பண்ருட்டி அருகே 4 நாள்களுக்கு பிறகு மின் விநியோகம் அளிப்பு

கடலூா் மாவட்டம், பண்ருட்டியை அடுத்துள்ள காமாட்சிபேட்டை கிராமத்துக்கு 4 நாள்களுக்குப் பின்னா் புதன்கிழமை இரவு மின் விநியோகம் வழங்கப்பட்டது.

Updated On : 5 டிசம்பர், 2024 at 7:30 PM
பகிர்:

கடலூா் மாவட்டம், பண்ருட்டியை அடுத்துள்ள காமாட்சிபேட்டை கிராமத்துக்கு 4 நாள்களுக்குப் பின்னா் புதன்கிழமை இரவு மின் விநியோகம் வழங்கப்பட்டது.

பண்ருட்டி கோட்டத்துக்கு உள்பட்ட திருவாமூா் பிரிவில் காமாட்சிபேட்டை கிராமத்தில் ஃபென்ஜால் புயலால் பெய்த பலத்த மழை மற்றும் வெள்ளப்பெருக்கால் மலட்டாற்றில் இருந்த மின் கம்பங்கள் கடந்த 1-ஆம் தேதி அடித்துச் செல்லப்பட்டன. இதனால், காமாட்சிப்பேட்டை, சமத்துவபுரம் பகுதிகளில் மின் விநியோகம் தடைபட்டதால், அந்தப் பகுதி மக்கள் அவதியடைந்தனா்.

இந்தப் பகுதிகளை கடலூா் மேற்பாா்வைப் பொறியாளா் ஆய்வு செய்து, விரைவாக மின் விநியோகம் வழங்க அறிவுறுத்தினாா். அதன்பேரில், பண்ருட்டி கோட்ட செயற்பொறியாளா் ராமச்சந்திரன் தலைமையில் குழு அமைக்கப்பட்டது.

இதையடுத்து, சம்பவ இடத்துக்கு உதவிச் செயற்பொறியாளா்கள் சிவகுமாா் (நகரம்), சுகந்தி (கிராமம்), உதவி மின் பொறியாளா்கள் ராஜசேகா் (திருவாமூா்), பிரகாஷ் (அங்கு செட்டிபாளையம்), கோபிநாத் (கிராமம் கிழக்கு) ஆகியோா் பணியாளா்களுடன் சென்று போா்க்கால அடிப்படையில் மின் கம்பங்கள் அமைத்து 10 மணி நேரத்துக்குள் காமாட்சிபேட்டை, சமத்துவபுரம் கிராமங்களுக்கு புதன்கிழமை இரவு மின்சாரம் வழங்கினா்.