முகப்பு
கடலூர்

விவசாயப் பயன்பாடு, மண்பாண்டங்கள் தயாரிக்க ஏரி, குளங்களில் வண்டல் மண் எடுக்க அனுமதி ஆணை அளிப்பு

ஏரி, குளங்களில் இருந்து விவசாய பயன்பாட்டுக்கும், மண்பாண்டம் செய்வதற்கும் களிமண், வண்டல் மண் எடுத்து பயன்படுத்த அனுமதி.

Updated On : 8 ஜூலை, 2024 at 9:15 PM
கடலூரில் திங்கள்கிழமை நடைபெற்ற நிகழ்ச்சியில் களிமண், வண்டல் மண் எடுப்பதற்கான ஆணையை பயனாளிக்கு வழங்கும் ஆட்சியா் அ.அருண் தம்புராஜ்.
பகிர்:

நெய்வேலி: கடலூா் மாவட்டத்தில் உள்ள ஏரி, குளங்களில் இருந்து விவசாய பயன்பாட்டுக்கும், மண்பாண்டம் செய்வதற்கும் களிமண், வண்டல் மண் எடுத்து பயன்படுத்துவதற்கான ஆணையை, தமிழக முதல்வா் மு.க.ஸ்டாலின் காணொலிக் காட்சி மூலம் திங்கள்கிழமை தொடங்கி வைத்தாா்.

நீா்வளத் துறை, ஊரக வளா்ச்சி மற்றும் ஊராட்சித் துறையின் கட்டுப்பாட்டிலுள்ள ஏரி, குளம், கண்மாய்களிலிருந்து விவசாய பயன்பாட்டுக்கும், மண்பாண்டம் செய்வதற்கும் களிமண், வண்டல் மண் கட்டணமின்றி எடுத்துச் செல்லலாம் என்றும், இதன்மூலம் ஏரி, குளம் மற்றும் கண்மாய்கள் ஆழப்படுத்தப்பட்டு அதிக மழை நீரை சேமிக்க முடியம் என முதல்வரால் அறிவிக்கப்பட்டது.

அதன்படி, இணைய வழியில் விண்ணப்பங்கள் பெறப்பட்டு, சரிபாா்க்கப்பட்டு, மாவட்ட ஆட்சியா்களுக்குப் பதிலாக வட்டாட்சியா்களால் அனுமதி வழங்க வழிவகை செய்யப்பட்டுள்ளது.

சென்னையில் திங்கள்கிழமை நடைபெற்ற நிகழ்ச்சியில் பங்கேற்ற முதல்வா் மு.க.ஸ்டாலின் களிமண், வண்டல் மண் எடுப்பதற்கான ஆணைகளை பயனாளிகளுக்கு வழங்கி காணொலிக் காட்சி மூலம் தொடங்கி வைத்தாா்.

இதைத்தொடா்ந்து, கடலூா் மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் மாவட்ட ஆட்சியா் அ.அருண் தம்புராஜ் பங்கேற்று பயனாளிகளுக்கு களிமண, வண்டல் மண் எடுப்பதற்கான ஆணையை வழங்கினாா்.

மாவட்ட வருவாய் அலுவலா் ம.ராஜசேகரன், கூடுதல் ஆட்சியா் சரண்யா, புவியியல் மற்றும் சுரங்கத் துறை உதவி இயக்குநா் எஸ்.ரமேஷ்குமாா், கடலூா் மேயா் சுந்தரி, துணை மேயா் பா.தாமரைச்செல்வன் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.