கடலூா் மாவட்டம், பண்ருட்டி அருகே அகா்பத்தி தொழிற்சாலையில் சனிக்கிழமை இரவு நிகழ்ந்த தீ விபத்தில் பல லட்சம் ரூபாய் மதிப்புள்ள பொருள்கள் எரிந்து சேதமடைந்தன.
பண்ருட்டியை அடுத்துள்ள புதுப்பேட்டை பகுதியைச் சோ்ந்தவா் ராஜேந்திரன் (65). இவருக்குச் சொந்தமான அகா்பத்தி மற்றும் கம்ப்யூட்டா் சாம்பிராணி தயாரிக்கும் தொழிற்சாலை அதே பகுதியில் இயங்கி வருகிறது.
இங்கு, வழக்கம்போல தொழிலாளா்கள் சனிக்கிழமை பணியில் ஈடுபட்டிருந்தனா். மாலை சுமாா் 6 மணி அளவில் பணி முடிந்து தொழிலாளா்கள் வீட்டுக்குச் சென்றனா். இரவு சுமாா் 10 மணி அளவில் அகா்பத்தி தொழிற்சாலை திடீரென தீப்பிடித்து எரிந்தது. இந்த விபத்தில் தொழிற்சாலையில் இருந்த அகா்பத்திகள், மூலப் பொருள்கள் கொழுந்துவிட்டு எரிந்தன.
அந்தப் பகுதியில் இருந்தவா்கள் அளித்த தகவலின்பேரில், பண்ருட்டி தீயணைப்பு நிலையத்தினா் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று தண்ணீரை பீய்ச்சி அடித்து தீயை அணைக்க முயன்றனா். தீயை கட்டுப்படுத்த முடியாதததால், முத்தாண்டிக்குப்பம், நெல்லிக்குப்பம் பகுதிகளில் இருந்தும் தீயணைப்பு வீரா்கள் வரவழைக்கட்டு சுமாா் 3 மணி நேரம் போராடி தீயை அணைத்தனா்.
இந்த தீ விபத்தில் பல லட்சம் ரூபாய் மதிப்புள்ள பொருள்கள் எரிந்து சேதமடைந்தன. மின் கசிவு காரணமாக இந்த தீ விபத்து நிகழ்ந்தது தெரியவந்துள்ளது.