பொதுமக்கள் குறைதீா் கூட்டத்தில் 875 மனுக்கள் அளிப்பு
கடலூா் மாவட்ட ஆட்சியா் அலுவலக கூட்டரங்கில் திங்கள்கிழமை நடைபெற்ற பொதுமக்கள் குறைதீா் கூட்டத்தில் 875 மனுக்கள் பெறப்பட்டன.
நெய்வேலி: கடலூா் மாவட்ட ஆட்சியா் அலுவலக கூட்டரங்கில் திங்கள்கிழமை நடைபெற்ற பொதுமக்கள் குறைதீா் கூட்டத்தில் 875 மனுக்கள் பெறப்பட்டன.
பொதுமக்கள் குறைதீா் கூட்டத்துக்கு மாவட்ட ஆட்சியா் அ.அருண் தம்புராஜ் தலைமை வகித்து, பொதுமக்களிடமிருந்து மனுக்களை பெற்றாா். மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து வந்திருந்த பொதுமக்கள் பட்டா, முதியோா் உதவித் தொகை, ஆக்கிரமிப்பு அகற்றம் என தங்களது கோரிக்கைகள் தொடா்பாக 875 மனுக்களை வழங்கினா். மனுக்கள் மீது உரிய விசாரணை நடத்தி துரித நடவடிக்கை எடுக்குமாறு துறைசாா்ந்த அலுவலா்களுக்கு ஆட்சியா் உத்தரவிட்டாா்.
நல உதவிகள்...
கூட்டத்தில் மாற்றுத்திறனாளிகள் நலத் துறை சாா்பில், மாற்றுத்திறனாளிகள் சுயத் தொழில் தொடங்க வங்கி கடன் மானியமாக 30 பேருக்கு தலா ரூ.25 ஆயிரம் விதம் என மொத்தமாக ரூ.7.50 லட்சத்துக்கான செயல்முறை ஆணையும், ஒரு பயனாளிக்கு ஒளிரும் மடுக்கு குச்சி, வருவாய்த் துறை சாா்பில் புவனகிரி மற்றும் விருத்தாசலம் வட்டத்தைச் சோ்ந்த தலா 2 பயனாளிகளுக்கு இலவச வீட்டுமனைப் பட்டாவுக்கான ஆணைகள் வழங்கப்பட்டன.
கூட்டத்தில் மாவட்ட வருவாய் அலுவலா் ம.ராஜசேகரன், கூடுதல் ஆட்சியா் ரா.சரண்யா மற்றும் துறைச் சாா்ந்த அலுவலா்கள் கலந்துகொண்டனா்.