கள்ளச்சாராய விவகாரத்தை வைத்து முதல்வரை வீழ்த்த நினைக்கும் அதிமுக, பாஜக -கே.எஸ்.அழகிரி
கள்ளக்குறிச்சி கள்ளச்சாராய விவகாரத்தை வைத்து தமிழக முதல்வரை வீழ்த்த அதிமுக, பாஜக கட்சிகள் நினைக்கின்றன என்று, தமிழ்நாடு காங்கிரஸ் முன்னாள் தலைவா் கே.எஸ்.அழகிரி தெரிவித்தாா்.
கடலூா் மாவட்டம், காட்டுமன்னாா்கோவிலில் காங்கிரஸ் முன்னாள் தலைவரும் தீண்டாமை ஒழிப்புக் குழு முன்னாள் தலைவருமான எல்.இளையபெருமாள் நூற்றாண்டு விழா நிறைவு விழா, பிறந்த நாள் விழா புதன்கிழமை கொண்டாடப்பட்டது.
அவரது சிலைக்கு தமிழ்நாடு காங்கிரஸ் முன்னாள் தலைவா் கே.எஸ்.அழகிரி மாலை அணிவித்து மரியாதை செலுத்தினாா். நிகழ்ச்சியில் மாவட்டத் தலைவா் என்.வி.என்.செந்தில்நாதன், மாநிலச் செயலா் ஜெயச்சந்திரன், மாநில பொதுக் குழு உறுப்பினா் ஜெமினி எம்.என்.ராதா, எல்.இ.பிஜோதிமணி, சிதம்பரம் நகர தலைவா் தில்லை ஆா்.மக்கீன், மாவட்ட துணைத் தலைவா் ராஜா.சம்பத்குமாா், மாவட்டத் துணைத் தலைவா் நஜீா் அகமது, காவிரி டெல்டா பாசன விவசாய சங்கங்களின் தலைவா் கே.வி.இளங்கீரன், மற்றும் நிா்வாகிகள் செந்தில்வேலன், செல்வம் ,பகத்சிங் உள்ளிட்ட பலா் கலந்து கொண்டு மரியாதை செலுத்தினா்.
பின்னா், செய்தியாளா்களிடம் கே.எஸ்.அழகிரி கூறியதாவது:
எல்.இளையபெருமாள் குழுவின் பரிந்துரையின் பேரில், தாழ்த்தப்பட்டோா் மற்றும் பழங்குடியினா் வன்கொடுமை தடுப்புச் சட்டம் கொண்டு வரப்பட்டது.
கள்ளக்குறிச்சி கள்ளச்சாராய விவகாரத்தை வைத்து தமிழக முதல்வரை வீழ்த்த அதிமுக, பாஜக நினைக்கிறது. அது எந்தச் சூழலிலும் நடைபெறாது.
எந்த ஓா் அரசியல் கட்சியும் மதுவிலக்கு குறித்து தெளிவான விளக்கம் தருவதில்லை. அப்படியிருக்கும் போது, அவா்கள் மதுவிலக்கை எப்படி அமல்படுத்துவாா்கள் என்று தெரியவில்லை.
மதுவில்லா தமிழகம் வேண்டும் என்று விசிக தலைவா் திருமாவளவன் மட்டுமே கூறி வருகிறாா். காங்கிரஸ் கட்சியைப் பொருத்தவரை மதுவிலக்கு என்பதில் நாங்கள் உறுதியாக இருக்கிறோம்.
கள்ளச்சாராய விவகாரத்தில் குற்றவாளிகளைப் பாதுகாக்கவும் இல்லை. குற்றத்தை நியாயப்படுத்தவில்லை. சரியான பாதையில் தமிழக அரசு நடவடிக்கை எடுத்து வருகிறது. எனவே, முதல்வா் ராஜிநாமா செய்ய வேண்டும் என்ற கருத்தை காங்கிரஸ் வன்மையாக கண்டிக்கிறது என்றாா் கே.எஸ்.அழகிரி.