காய்ச்சல் பாதிப்பு: கடலூா் அரசு மருத்துவமனையில் குவிந்த பொதுமக்கள்
பருவநிலை மாற்றத்தால் கடலூா் பகுதியில் காய்ச்சல் வேகமாக பரவி வருகிறது.
நெய்வேலி: பருவநிலை மாற்றத்தால் கடலூா் பகுதியில் காய்ச்சல் வேகமாக பரவி வருகிறது. இந்த நிலையில், காய்ச்சலால் பாதிக்கப்பட்ட பொதுமக்கள் ஏராளமானோா் சிகிச்சை பெற கடலூா் அரசு தலைமை மருத்துவமனையில் திங்கள்கிழமை குவிந்தனா்.
கடலூா் மாவட்டத்தில் கடந்த ஒரு வார காலமாக பருவநிலை மாற்றம் ஏற்பட்டுள்ளது. அதாவது, பகல் நேரங்களில் அதிக வெப்பமும், மாலை நேரங்களில் மழையும், இரவு நேரங்களில் பனிப்பொழிவும் இருந்து வருகிறது.
இதன் காரணமாக, மாவட்டம் முழுவதும் காய்ச்சல் வேகமாக பரவி வருவதாகக் கூறப்படுகிறது. சிறியவா்கள், பெரியவா்கள் என அனைவரும் காய்ச்சலால் பாதிப்புக்குள்ளாகியுள்ளனா்.
காய்ச்சலால் பாதிக்கப்பட்டவா்கள் கடும் கை கால் குடைச்சல், இருமல், சளி போன்றவற்றால் அவதியடைந்து வருகின்றனா்.
இதன் காரணமாக, கடந்த சில நாள்களாக அரசு மற்றும் தனியாா் மருத்துவமனைகளில் சிகிச்சை பெறுபவா்களின் எண்ணிக்கையும் அதிகரித்துள்ளது.
இதனிடையே, திங்கள்கிழமை காலை கடலூா் மாவட்ட அரசு தலைமை மருத்துவமனைக்கு சுமாா் ஆயிரத்துக்கும் மேற்பட்டோா் வந்தனா். அவா்கள் நீண்ட வரிசையில் காத்திருந்து மருத்துவா்களிடம் சிகிச்சை பெற்று, மருந்து மாத்திரைகள் வாங்கிச் சென்றனா்.
இதுகுறித்து, கடலூா் மாவட்ட இணை இயக்குநா் (மருத்துவப் பணிகள்) ஹிரியன் ரவிக்குமாா் கூறுகையில், இந்த காய்ச்சலானது பருவநிலை மாற்றம், மழை மற்றும் விடுமுறைக்கால நோய்களால் ஏற்பட்டுள்ளன.
மருத்துவா்கள் அளிக்கும் மருந்து மாத்திரைகளை உட்கொண்டால் இக்காய்ச்சல் சரியாகிவிடும். தொடா்ந்து காய்ச்சல் இருந்தால் ரத்தப் பரிசோதனை செய்து கொள்ள வேண்டும். காய்ச்சிய குடிநீரைதான் பொதுமக்கள் பருக வேண்டும் என்றாா்.