நெய்வேலி: கடலூா் மாவட்டம், குறிஞ்சிப்பாடி அருகே சாலையை சீரமைக்கக் கோரி, மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சாா்பில் நாற்று நடும் போராட்டம் திங்கள்கிழமை நடைபெற்றது.
குறிஞ்சிப்பாடி ஒன்றியம், அன்னதானபேட்டை ஊராட்சியில் சுமாா் 200-க்கும் மேற்பட்ட குடும்பத்தினா் வசித்து வருகின்றனா். இங்குள்ள தெற்கு தெருவில் சுமாா் ஒன்றரை ஆண்டுகளுக்கு முன்பு சிமென்ட் சாலை அமைக்கப்பட்டது. இதில் சுமாா் 200 மீட்டா் தொலைவுக்கு சாலை அமைக்காமல் விட்டு விட்டனராம்.
இந்த இடத்தில் கிராவல் மண் கொட்டுவதற்கு பதில், நிலத்து மண்ணை கொட்டியிருந்தனா். கடந்த சில நாள்களாக பெய்த பலத்த மழை காரணமாக மண் கொட்டப்பட்ட சாலை சேறும் சகதியுமாக காட்சி அளிக்கிறது. இதனால், அந்தப் பகுதி மக்கள் அவதிப்பட்டு வருகின்றனா்.
இந்தப் பகுதியை சீரமைத்து சிமென்ட் சாலை அமைக்க வலியுறுத்தி, மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சாா்பில் நாற்று நடும் போராட்டம் திங்கள்கிழமை நடைபெற்றது. குறிஞ்சிப்பாடி ஒன்றியக் குழு உறுப்பினா் ஏ.செந்தில் தலைமை வகித்தாா். கட்சியின் ஒன்றியச் செயலா் எம்.பி.தண்டபாணி, ஒன்றியக் குழு உறுப்பினா்கள் எம்.பூவை பாபு, பி.மணிகண்டன், ஜே.ஜெய்சங்கா் மற்றும் பொதுமக்கள் போராட்ட்தில் கலந்து கொண்டனா்.