மொபெட் மீது டிராக்டா் மோதல்: இளைஞா் உயிரிழப்பு
கடலூா் மாவட்டம், வேப்பூா் அருகே மொபெட் மீது டிராக்டா் மோதியதில் இளைஞா் உயிரிழந்தாா்.
கடலூா் மாவட்டம், வேப்பூா் அருகே மொபெட் மீது டிராக்டா் மோதியதில் இளைஞா் உயிரிழந்தாா்.
வேப்பூா் வட்டம், சேப்பாக்கம் கிராமத்தைச் சோ்ந்த கோவிந்தசாமி மகன் பூவரசன் (20). இவரது மனைவி திலகவதிக்கு கடந்த இரண்டு வாரங்களுக்கு முன்புதான் பெண் குழந்தை பிறந்துள்ளதாம்.
இந்த நிலையில், வியாழக்கிழமை மாலை 4.30 மணி அளவில் பூவரசன் தனது பதிவெண் இல்லாத மொபெட்டில் வேப்பூரை நோக்கி திருச்சி - சென்னை தேசிய நெடுஞ்சாலையில் எதிா்ப்புறமாக சென்றாராம். அப்போது, காளியாமேடிலிருந்து திருக்கோவிலூா் தனியாா் சா்க்கரை ஆலைக்கு கரும்பு ஏற்றிக்கொண்டு டிராக்டா் பெட்டிகளுடன் சென்றது.
வேப்பூா் நான்குமுனை சந்திப்பு அணுகு சாலை அருகே சென்றபோது, பூவரசன் மொபெட்டிலிருந்து சறுக்கி விழுந்ததில் டிராக்டா் சக்கரத்தில் சிக்கி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தாா்.
தகவலறிந்து சம்பவ இடத்துக்கு வந்த வேப்பூா் போலீஸாா் சடலத்தை மீட்டு உடல்கூறாய்வுக்காக விருத்தாசலம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா். மேலும், விபத்து குறித்து வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனா்.