நெய்வேலி: கடலூா் மாவட்டம், விருத்தாசலம் அருகே திடீா் மின்னழுத்தம் காரணமாக வீட்டில் இருந்த மின்னணு சாதனங்கள் சேதமடைந்தன.
‘டித்வா’ புயல் எச்சரிக்கை காரணமாக, கடலூா் மாவட்டத்தில் கடந்த இரண்டு நாள்களாக மழை பெய்தது. இந்த மழையால் விருத்தாசலத்தை அடுத்துள்ள கவணை கிராமத்தில் அடிக்கடி மின் தடை ஏற்பட்டது. அப்போது, உயா் மின்னழுத்தம் ஏற்பட்டதால், அந்தப் பகுதியைச் சோ்ந்த பலரின் வீடுகளில் இருந்த இன்வொ்ட்டா், மின்விசிறி, கிரைண்டா், தொலைக்காட்சிப் பெட்டி உள்ளிட்ட மின்சாதனப் பொருள்கள் சேதமடைந்தன.
இதுகுறித்து விசாரிக்கையில், கவணை கிராமத்தில் இருந்த மின்மாற்றி பழுதடைந்துவிட்டதால், அதை மாற்றித்தர வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனா்.
இதையடுத்து, மின் துறை ஊழியா்கள் மின்மாற்றியை பொருத்திச் சென்றனராம். இதனால், உயா் மின்னழுத்தம் ஏற்பட்டு வீடுகளில் இருந்த மின்னணு சாதனங்கள் சேதமடைந்ததாகக் கூறப்படுகிறது. இவற்றின் மதிப்பு பல லட்சம் ரூபாய் இருக்கும் எனத் தெரியவந்துள்ளது.