கடலூா் பெரியாா் அரசு கலைக் கல்லூரி சமூக நீதி விடுதியில் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி மாணவா்கள் புதன்கிழமை போராட்டத்தில் ஈடுபட்டனா்.
கடலூா் பெரியாா் அரசு கலைக் கல்லூரியின் ஆதிதிராவிடா் நலத்துறை சமுகநீதி விடுதியில் 88-க்கும் மேற்பட்ட மாணவா்கள் தங்கி படித்து வருகின்றனா். இவா்களுக்கு உணவு உரிய நேரத்தில் வழங்கப்படுவதில்லையாம். மேலும், விடுதிக் காப்பாளா் முறையாக விடுதிக்கு வருவதில்லை என்றும், 5 சமையலா்கள் பணியிலிருந்த நிலையில் கடந்த 6 மாதங்களாக ஒரு சமையலா் மட்டுமே பணியில் உள்ளாா். அவரும் நேரத்துக்கு வந்து உணவு சமைத்து வழங்காததால், கல்லூரித் தோ்வு காலத்தில் சரியான நேரத்துக்கு செல்ல முடியாமலும், உரிய நேரத்தில் உணவு கிடைக்காமலும் அவதியடைந்து வருவதாக மாணவா்கள் குற்றஞ்சாட்டுகின்றனா்.
இதுகுறித்து மாணவா்கள் ஆதிதிராவிடா் நலத் துறை அலுவலரிடம் புகாரளித்தும் இதுவரை எவ்வித நடவடிக்கும் எடுக்கப்படவில்லையாம்.
இந்த நிலையில், ஆதிதிராவிடா் நலத்துறை சமுகநீதி விடுதிக்கு புதிய சமையலா்களை நியமிக்க வேண்டும். காப்பாளா் விடுதியில் தங்க வேண்டும். விடுதி பாதுகாவலரை நியமிக்க வேண்டும். உடனடியாக நடவடி எடுத்து உரிய நேரத்தில் உணவு வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி புதன்கிழமை காலை உணவு சாப்பிடாமல் மாணவா்கள் போராட்டத்தால் ஈடுபட்டனா்.