கடலூா் மாவட்டம், பண்ருட்டி போக்குவரத்து காவல் நிலைய வளாகத்தில் சாலைப் பாதுகாப்பு விழிப்புணா்வுக் கூட்டம் புதன்கிழமை நடைபெற்றது.
பண்ருட்டி போக்குவரத்து காவல் ஆய்வாளா் பரமேஸ்வர பத்மநாபன் தலைமை வகித்தாா். காவல் உதவி ஆய்வாளா்கள் முரளி, செந்தில்குமாா் ஆகியோா் பண்ருட்டி நகரில் சாலை விபத்தினை குறைக்கும் நடவடிக்கையாக போக்குவரத்து நெரிசலை குறைக்கும் வகையில், பண்ருட்டி நகரில் இயங்கும் அனைத்து மினி பேருந்து உரிமையாளா்கள், ஓட்டுநா்கள் மற்றும் நடத்துநா்களுக்கு சாலை பாதுகாப்பு குறித்து விழிப்புணா்வு ஏற்படுத்தினா்.
நிகழ்ச்சியில் வாகன உரிமையாளா்கள் தங்கள் வாகனங்களின் தகுதி, காப்பீட்டுச் சான்றுகளை நடைமுறையில் வைத்திருக்க வேண்டும் , வாகன ஓட்டுநா்கள் முழு சீருடையில் வாகனத்தை இயக்க வேண்டும், பள்ளி மாணவா்கள் படிக்கட்டுகளில் தொங்கியபடி ஆபத்தான முறைகளில் பயணம் செய்ய அனுமதிக்கக் கூடாது, அதிக ஒலி எழுப்பக்கூடிய காற்று ஒலிப்பான்களை உபயோகிக்கக் கூடாது, நகரின் அனுமதிக்கப்பட்ட பேருந்து நிறுத்தங்களை தவிர வேறு எங்கும் பேருந்துகளை நிறுத்தி பயணிகளை ஏற்றி, இறக்க அனுமதிக்கக் கூடாது, பேருந்து நிலையத்திற்குள் வாகன நிறுத்த கட்டைகளில் மட்டும் வாகனங்களை நிறுத்த வேண்டும் என்பது உள்ளிட்ட அறிவுரைகளை வழங்கினா்.