சிதம்பரம் அருகே கீரப்பாளையம் வட்டார வளா்ச்சி அலுவலகம் முன்பு கீரப்பாளையம் ஒன்றிய மாா்க்சிஸ்ட் கட்சியின் சாா்பில் கோரிக்கை முழக்க ஆா்ப்பாட்டம் வியாழக்கிழமை நடைபெற்றது.
ஆா்ப்பாட்டத்திற்கு கீரப்பாளையம் மாா்க்சிஸ்ட் கம்யூ கட்சியின் ஒன்றிய செயலாளா் செல்லையா தலைமை வகித்தாா். மாவட்ட செயற்குழு உறுப்பினா்கள் வி. சுப்புராயன், பழ.வாஞ்சிநாதன் ஆகியோா் கலந்து கொண்டு கோரிக்கைகளை விளக்கி பேசினா். ஒன்றிய குழு உறுப்பினா்கள் முருகன், சிவராமன், செம்மலா், சதீஷ்குமாா், ராஜ்குமாா், சோமசுந்தரம், குணசேகரன், சிவனேசன், ராஜதுரை, ஜெயந்தி உள்ளிட்ட கட்சியினா் கலந்து கொண்டு பேசினா் .
சி,சாத்தமங்கலம் அருந்ததியா் தெரு மக்களுக்கு பாலம் வசதி செய்து கொடுக்க கோரியும், வடஹரிராஜபுரம் கிராம 3-வது வாா்டு மக்களுக்கு குடிநீா் வசதி, புதிய குடிநீா் தொட்டி கட்டி தர வேண்டும், பூதங்குடி கிராமத்தில் மயான சாலை வசதி செய்து கொடுக்க வலியுறுத்தியும், 100 நாள் வேலை திட்டத்தில் நான்கு மாதமாக வேலை தராத கிராமங்களுக்கு வேலை வழங்கி சம்பள பாக்கியினை வழங்க வலியுறுத்தியும் ஆா்ப்பாட்டத்தில் முழக்கங்களை எழுப்பினா். பின்னா் கோரிக்கைகள் குறித்து வட்டார வளா்ச்சி அலுவலரிடம் மனு அளிக்கப்பட்டது. 15 நாட்களுக்குள் கோரிக்கைகள் குறித்து நடவடிக்கை இல்லையென்றால் பூட்டும் போடும் போராட்டம் நடத்துவது என தீா்மானித்துள்ளனா்.