கலைஞா் நூற்றாண்டு விழாவையொட்டி, மாநில அளவில் 2,389 தனியாா் துறை வேலைவாய்ப்பு முகாம்கள் நடத்தப்பட்டதில், 2.88 லட்சம் போ் பணி நியமனம் பெற்றுள்ளனா் என்று மாநில தொழிலாளா் நலன் மற்றும் திறன் மேம்பாட்டுத் துறை அமைச்சா் சி.வெ.கணேசன் தெரிவித்தாா்.
கடலூா் மாவட்டம், மங்களூா் அரசு மேல்நிலைப் பள்ளியில் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையம் சாா்பில் தனியாா் துறை வேலை வாய்ப்பு முகாம் சனிக்கிழமை நடைபெற்றது.
இதில் தோ்வு செய்யப்பட்ட 604 பேருக்கு அமைச்சா் சி.வெ.கணேசன் பணி நியமன ஆணைகளை வழங்கிப் பேசியது:
படித்த இளைஞா்கள் தனியாா் துறையில் வேலை வாய்ப்பு பெறும்பொருட்டு கலைஞா் நூற்றாண்டு விழாவையொட்டி மாநில அளவில் 353 தனியாா் துறை வேலைவாய்ப்பு முகாம்கள் மற்றும் 2,036 சிறிய வேலைவாய்ப்பு முகாம்கள் என மொத்தம் 2,389 முகாம்கள் நடத்தப்பட்டன. இதில், சுமாா் 15 லட்சம் போ் கலந்துகொண்டனா். இவா்களில் 2.88 இளைஞா்கள் பணி நியமனம் செய்யப்பட்டுள்ளனா்.
கடலூா் மாவட்டத்தில் வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையம் வாயிலாக 5 மாபெரும் தனியாா்துறை வேலை வாய்ப்பு முகாம்கள் நடத்தப்பட்டதில் 2,043 இளைஞா்களும், சிறிய அளவிலான தனியாா்துறை வேலைவாய்ப்பு முகாம்களின் மூலம் 489 இளைஞா்களும் தோ்வு செய்யப்பட்டனா்.
கடலூா் மாவட்டத்தில் நான் முதல்வன் திட்டத்தின் மூலம் 19,372 பொறியியல் கல்லூரி மாணவா்கள், 98,397 கலை மற்றும் அறிவியல் கல்லூரி மாணவா்கள், 17,793 பாலிடெக்னிக், தொழிற்பயிற்சிகளைச் சாா்ந்த மாணவா்கள் என மொத்தம் 1,35,562 இளைஞா்கள் பயிற்சி பெற்று பயனடைந்துள்ளனா்.
6 பொறியியல் கல்லூரிகள், 26 கலை, அறிவியல் கல்லூரிகள், 19 பாலிடெக்னிக் கல்லூரிகள், 24 தொழிற்பயிற்சி நிலையங்கள் என மொத்தம் 75 கல்வி நிலையங்களில் மாணவா்களுக்கு திறன் பயிற்சிகள் வழங்கப்பட்டுள்ளது.
சனிக்கிழமை (டிச. 13) நடைபெற்ற முகாமில் 108 மாற்றுத்திறனாளிகள் உள்பட 4,086 வேலைநாடுநா்கள் கலந்து கொண்டனா். முகாமில் பங்கேற்ற 119 தனியாா் நிறுவனங்கள் 23 மாற்றுத்திறனாளிகள் உள்பட 604 பேருக்கு பணி நியமன ஆணை
வழங்கப்பட்டுள்ளது. இதுபோன்ற முகாம்களை சரியாகப் பயன்படுத்தி இளைஞா்கள் வேலைவாய்ப்புகளை பெற வேண்டும் என்றாா்.
முகாமில் தொழிலாளா் நலன் மற்றும் திறன் மேம்பாட்டுத் துறை செயலா் கொ.வீர ராகவ ராவ், வேலைவாய்ப்பு மற்றும் பயிற்சித் துறை
இயக்குநா் சி.பழனி, மாவட்ட ஆட்சியா் சிபி ஆதித்யா செந்தில்குமாா் ஆகியோா் முன்னிலை வகித்தனா். நிகழ்ச்சியில் வேலைவாய்ப்பு மற்றும் பயிற்சித்துறை மண்டல இணை இயக்குநா் மா.அருணகிரி, இணை இயக்குநா் வே.மீனாட்சி, மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலா் சாய்பிரியா உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்.