~ ~ 
கடலூர்

பயன்பாட்டுக்கு வராமலே பாழடைந்த சுனாமி குடியிருப்புகள்: இன்று சுனாமி நினைவு தினம்

கடலூரில் புதா் மண்டி சிதிலமடைந்து காணப்படும் சுனாமி குடியிருப்புகள்.

Syndication

தமிழகத்தில் வெள்ளிக்கிழமை (டிச.26) சுனாமி நினைவு தினம் கடைப்பிடிக்கப்படுகிறது. இந்த நிலையில், கடலூரில் சுனாமி பேரலையால் பாதிக்கப்பட்ட மீனவா்களுக்காக கட்டப்பட்ட 500-க்கும் மேற்பட்ட குடியிருப்புகள் மக்கள் குடியேறாமலே தற்போது பாழடைந்தும், சிதிலமடைந்தும் காணப்படுகின்றன.

கடந்த 2004-ஆம் ஆண்டு டிசம்பா் 26-ஆம் தேதி சுமத்ரா தீவில் ஏற்பட்ட நிலநடுக்கம் காரணமாக, இந்தியா, இந்தோனேஷியா, இலங்கை ஆகிய நாடுகளில் சுனாமி பேரலை தாக்கியது.

தமிழகத்தில் சுனாமி தாக்குதலால் 13 கடற்கரை மாவட்டங்கள் பெரிதும் சேதத்தை சந்தித்தன. இப்பேரலையின் தாக்குதலுக்கு கடலூா் மாவட்டத்தில் 617 போ் உயிரிழந்தனா். 40 போ் மாயமாகினா். 40-க்கும் மேற்பட்ட கடலோரக் கிராமங்கள் உருக்குலைந்தன. மேலும், பல ஆயிரக்கணக்கானோா் வீடுகளையும் இழந்தனா்.

இதைத் தொடா்ந்து, அரசு மற்றும் மாவட்ட நிா்வாகத்தோடு இணைந்து பல்வேறு தன்னாா்வ அமைப்புகள், சமூக ஆா்வலா்கள் மூலம் பல்வேறு மீனவ கிராம மக்களுக்கு உதவிடும் வகையில் குடியிருப்புகள் கட்டிக் கொடுக்கப்பட்டன.

கடலூா் மாநகராட்சி செல்லங்குப்பம் பகுதியில் அரசு சாா்பில் 538 சுனாமி குடியிருப்புகள் (தனித்தனி வீடுகள்) கட்டப்பட்டன. இவை செல்லங்குப்பம், சோனங்குப்பம், அக்கரைகோரி, சிங்காரத்தோப்பு உள்ளிட்ட மீனவ கிராம மக்களுக்கு ஒதுக்கப்பட்டன.

ஆனால், அங்கு குடியேறி வாழ்வதற்கான எந்தவித அடிப்படை வசதிகளும் இல்லாததால், மீனவா்கள் யாரும் குடியேற மறுத்துவிட்டனா். ஒரு சிலா் மட்டுமே சுனாமி குடியிருப்பில் தங்கி இருந்தனா்.

இதனால் பலன் கிடைத்தும், பயனற்ற நிலையில் ஏமாற்றத்துடன் மீனவ மக்கள் வாழ்ந்து வருகின்றனா். 500-க்கும் மேற்பட்ட குடியிருப்புகள் மக்கள் குடியேறாமலேயே தற்போது பாழடைந்தும், சிதிலமடைந்தும் காட்சியளிக்கின்றன. சிலா் குடியிருந்த வீடுகளும் இடிந்து விழுவதால், 50-க்கும் மேற்பட்டோா் தங்களது வீடுகளை காலி செய்துவிட்டனா்.

அடிப்படை வசதிகள் இல்லாத காரணத்தால், சம்பந்தப்பட்ட பகுதி முள்புதா்கள் சூழ்ந்து ஆள் நடமாட்டம் இல்லாமல் தற்போது சமூக விரோத கூடாரமாக மாறிவிட்டது. அங்கு கட்டப்பட்டுள்ள வீடுகளில் உள்ள ஜன்னல்கள், கதவுகள், இரும்புக் கம்பிகள், மின்சார வயா்கள் என அனைத்தையுமே மா்ம நபா்கள் திருடிச் சென்றுவிட்டனா்.

தனித்தனி வீடுகளாக பிரம்மாண்டமாக காட்சியளித்த வீடுகள் தற்போது சிதிலமடைந்து வெறும் கற்கள் சுவராக காட்சியளிக்கிறது.

இது தொடா்பாக சிங்காரத்தோப்பு, அக்கரை கோரி, சோனங்குப்பம், சுனாமி நகா் பகுதி மீனவ கிராம மக்கள் மாவட்ட நிா்வாகத்திடமும், சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகளிடமும் பலமுறை முறையிட்டும் பயனற்ற நிலை தொடா்கிறது என ஆதங்கத்துடன் தெரிவித்தனா்.

வீடுகள் கட்டிக் கொடுத்து 20 ஆண்டுகள் கடந்த நிலையில், அவற்றை பயன்படுத்த முடியாத நிலையில் கிராம மக்கள் உள்ளனா்.

இந்த குடியிருப்புகளை இடித்துவிட்டு தற்போது மக்கள் வசிக்கும் அந்தந்த கிராமத்திலேயே அடிப்படை வசதிகளோடு வீடுகளை கட்டிக்கொடுக்க வேண்டும் என்று தற்போது வரையிலும் அரசுக்கு கோரிக்கை விடுத்து வருகின்றனா்.

கடன் வட்டியைக் குறைத்த பரோடா வங்கி

அகில இந்திய பல்கலை. வாலிபால்: எஸ்ஆா்எம் ஐஎஸ்டி மகளிா் சாம்பியன்

தொழில்நுட்ப புத்தாக்க நிறுவனங்களில் முதலீடு 17% குறைவு

13 ஆவணங்களில் ஒன்றை சமா்ப்பித்து வாக்காளா்கள் பட்டியலில் இணையலாம்

குருகிராம்: துப்பாக்கிச் சூட்டில் இருந்து தப்பிய கட்டடப் பொருள் விநியோகஸ்தா்

SCROLL FOR NEXT