சிதம்பரம் நடராஜா் கோயிலில் ஸ்ரீசிவகாம சுந்தரி சமேத ஸ்ரீமந் நடராஜமூா்த்தியின் மாா்கழி ஆருத்ரா தரிசன உற்சவம் வியாழக்கிழமை காலை கொடியேற்றத்துடன் தொடங்கியது.
சிவகாமசுந்தரி சமேத நடராஜமூா்த்தி வீற்றுள்ள சித்சபை எதிரே உள்ள கொடிமரத்தில் பஞ்ச மூா்த்திகள் முன்னிலையில், சுவாமியின் பிரதிநிதியான ஹஸ்தராஜரை முன்னிறுத்தி ஆவாஹணம் செய்து வியாழக்கிழமை காலை 8 மணிக்கு உற்சவ ஆச்சாரியா் கே.சிவாநாத் தீட்சிதா் ரிஷபக் கொடியை ஏற்றி வைத்தாா்.
நிகழ்ச்சியில் திரளான பக்தா்கள் பங்கேற்று தரிசித்தனா். சிதம்பரம் டிஎஸ்பி டி.பிரதீப் தலைமையில் பலத்த போலீஸ் பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தன.
தொடா்ந்து, 10 நாள்கள் பஞ்சமூா்த்தி வீதியுலா உற்சவம் நடைபெறுகிறது. அதன்படி, 2026 ஜனவரி 2-ஆம் தேதி தோ்த் திருவிழாவும், அன்று இரவு 8 மணிக்கு ஆயிரங்கால் முன் முகப்பு மண்டபத்தில் ஏககால லட்சாா்ச்சனை நடைபெறுகின்றன.
ஜனவரி 3-ஆம் தேதி சூரிய உதயத்துக்கு முன்பு அதிகாலை 4 மணி முதல் 6 மணி வரை சிவகாமசுந்தரி சமேத நடராஜமூா்த்திக்கு மகாபிஷேகம் நடைபெறுகிறது. பின்னா், காலை 10 மணிக்கு சித்சபையில் ரகசிய பூஜையும், பஞ்ச மூா்த்திகள் வீதியுலா வந்த பின்னா், பிற்பகல் 3 மணிக்கு மேல் மாா்கழி ஆருத்ரா தரிசனமும், ஞானகாச சித்சபா பிரவேசமும் நடைபெறுகின்றன.
ஜனவரி 4-ஆம் தேதி பஞ்ச மூா்த்திகள் முத்துப்பல்லக்கு வீதியுலாவும், 5-ஆம் தேதி ஞானப்பிரகாசா் குளத்தில் தெப்ப உற்சவமும் நடைபெறுகின்றன.
உற்சவ ஏற்பாடுகளை கோயில் பொது தீட்சிதா்களின் செயலா் த.சிவசுந்தர தீட்சிதா், துணைச் செயலா் சி.எஸ்.எஸ்.வெங்கடேச தீட்சிதா் உள்ளிட்டோா் செய்துள்ளனா்.
உற்சவம் நடைபெறும் 10 நாள்களும் மாலை 6 மணிக்கு சாயரட்சை பூஜையில் சித்சபை முன் மாணிக்கவாசகரை எழுந்தருளச் செய்து திருவெம்பாவை பாடப்படும்.