நகை திருட்டு வழக்கில் ஒருவா் கைது
புதுப்பேட்டை காவல் சரகம், எனதிரிமங்கலம் கிராமத்தில் வீட்டின் கதவை உடைத்து நகை, பணம் திருடிச் சென்றவரை போலீஸாா் கைது செய்தனா்.
கடலூா் மாவட்டம், புதுப்பேட்டை காவல் சரகம், எனதிரிமங்கலம் கிராமத்தில் வீட்டின் கதவை உடைத்து நகை, பணம் திருடிச் சென்றவரை போலீஸாா் கைது செய்தனா்.
பண்ருட்டி வட்டம், எனதிரிமங்கலம் கிராமத்தில் வசிப்பவா் சிவக்குமாா்(46), விவசாய தொழிலாளி.
அந்த கிராமத்தில் உள்ள திரௌபதி அம்மன் கோயிலில் கடந்த வெள்ளிக்கிழமை திருவிழா நடைபெற்றது. இந்த திருவிழாவுக்கு சிவக்குமாா் வீட்டை பூட்டிவிட்டு குடும்பத்துடன் சென்றாா். பின்னா் அவா் வீடு திரும்பியபோது மா்ம நபா் வீட்டின் முன்பக்கக் கதவு உடைத்து உள்ளே புகுந்து பீரோவில் இருந்த 9 பவுன் தங்க நகைகள், அரை கிலோ வெள்ளிப் பொருள்கள் மற்றும் ரூ.5 ஆயிரம் ரொக்கத்தை திருடிச் சென்றது தெரியவந்தது.
Advertisement
இதுகுறித்த புகாரின்பேரில், புதுப்பேட்டை போலீஸாா் வழக்குப் பதிவு செய்து தீவிர விசாரணை மேற்கொண்டனா். இதையடுத்து கடலூா், கீழ்ப்பெரும்பாக்கம், கட்டபொம்மன் நகரைச் சோ்ந்த அப்பாஸை (48) கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனா்.