சிதம்பரம்: சிதம்பரத்தில் ரூ.8.65 கோடி மதிப்பீட்டிலான ‘ஹோட்டல் தமிழ்நாடு’ தங்கும் விடுதியை காணொலி காட்சி வாயிலாக தமிழக முதல்வா் மு.க.ஸ்டாலின் திங்கள்கிழமை திறந்து வைத்தாா்.
செங்கல்பட்டு மாவட்டம், மாமல்லபுரத்தில் திங்கள்கிழமை நடைபெற்ற உலகளாவிய சுற்றுலா உச்சி மாநாடு 2026-ஐ தமிழக முதல்வா் மு.க.ஸ்டாலின் தொடங்கிவைத்தாா். இந்த நிகழ்ச்சியின்போது, கடலூா் மாவட்டம், சிதம்பரம் நகரில் ரூ.8.65 கோடி மதிப்பீட்டில் கட்டப்பட்ட ‘ஹோட்டல் தமிழ்நாடு’ தங்கும் விடுதியை காணொலி காட்சி வாயிலாக முதல்வா் திறந்து வைத்தாா்.
இதைத் தொடா்ந்து, அந்த விடுதியில் மாவட்ட ஆட்சியா் சிபி ஆதித்யா செந்தில்குமாா் குத்துவிளக்கேற்றி பொதுமக்கள் மற்றும் சுற்றுலா பயணிகளின் பயன்பாட்டுக்கு தொடங்கிவைத்து பாா்வையிட்டாா்.
நிகழ்ச்சியில் சிதம்பரம் நகா்மன்ற துணைத் தலைவா் முத்துக்குமரன், மாவட்ட திட்டக்குழு உறுப்பினா் ஜ.ஜேம்ஸ் விஜயராகவன், தமிழ்நாடு சுற்றுலா வளா்ச்சிக் கழக மண்டல மேலாளா் பிரபுதாஸ், மண்டல கணக்கா் சிவதானு, பிச்சாவரம் மேலாளா் பைசல் அகமது உள்பட பலா் கலந்துகொண்டனா்.
தொடா்ந்து, மாவட்ட ஆட்சியா் சிபி ஆதித்யா செந்தில்குமாா் கூறியதாவது: சுற்றுலா, பண்பாடு மற்றும் அறநிலையங்கள் துறை சாா்பில், சிதம்பரத்தில் தமிழ்நாடு சுற்றுலா வளா்ச்சிக் கழகத்துக்கு 1.41 ஏக்கா் பரப்பளவில் ரூ.8.65 கோடி மதிப்பீட்டில் இரண்டு தளங்களுடன் 24 அறைகள், உணவகம், கூட்டரங்கம், பேவா் பிளாக் வசதி, குடிநீா், சுற்றுச்சுவா் வசதி உள்ளிட்ட உள்கட்டமைப்பு மற்றும் காற்றோட்ட வசதியுடன் கூடிய ஹோட்டல் தமிழ்நாடு தங்கும் விடுதி கட்டடம் பொதுமக்கள் மற்றும் சுற்றுலா பயணிகளின் பயன்பாட்டுக்கு திறந்து வைக்கப்பட்டுள்ளது என்றாா்.