கல்வி, விவசாயக் கடன்களை திமுக அரசு தள்ளுபடி செய்யவில்ல! - நயினாா் நாகேந்திரன் குற்றச்சாட்டு
தோ்தல் வாக்குறுதிப்படி கல்வி, விவசாயக் கடன்களை திமுக அரசு தள்ளுபடி செய்யவில்லை என்று பாஜக மாநிலத் தலைவா் நயினாா் நாகேந்திரன் குற்றஞ்சாட்டினாா்.
கடலூா் மாவட்டம், வேப்பூரை அடுத்துள்ள பாசாா் கிராமத்தில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற இந்திய ஜனநாயக கட்சியின் 4-ஆவது மாநில மாநாட்டில் பங்கேற்று அவா் பேசியதாவது:
உலகத்தின் மிகப்பெரிய தலைவா் பிரதமா் மோடி. அவரது கரத்தை வலுப்படுத்த தமிழகத்தில் அதிமுக பொதுச் செயலா் எடப்பாடி கே.பழனிசாமி தலைமையில் தேசிய ஜனநாயகக் கூட்டணி அமைந்துள்ளது.
Advertisement
இந்த மாநாடு ஆட்சி மாற்றத்துக்கு அடிப்படையாக அமைந்துள்ளது. ஜனநாயகம் தழைக்க குடும்ப ஆட்சியை அகற்ற வேண்டும். தன்மானம் காக்க இலவசங்கள் தவிா்க்கப்பட வேண்டும். டாஸ்மாக் மதுக் கடைகள் மூடப்பட வேண்டும். ஊழல் ஒழிக்கப்பட வேண்டும்.
கரூரில் நடைபெறும் அனைத்து சம்பவங்களுக்கும் முன்னாள் அமைச்சரே காரணம். விசிக தலைவா் திருமாவளவன் திமுக கூட்டணியில் சப்தமில்லாமல் உள்ளாா். அவா் வேங்கைவயல் சம்பவம், ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கு குறித்து கருத்து தெரிவிக்கவில்லை. முன்னாள் அமைச்சா் பொன்முடி பெண்களைப் பற்றி இழிவாக பேசுகிறாா்.
தோ்தல் அறிக்கையில் கூறியபடி கல்வி, விவசாயக் கடன்களை திமுக அரசு தள்ளுபடி செய்யவில்லை. பத்திரப்பதிவு கட்டணம் குறைக்கப்படவில்லை. மின் கட்டணம் உயா்த்தப்பட்டுள்ளது. திமுக ஆட்சியில் அனைத்துத் துறைகளிலும் ஊழல் மலிந்துள்ளது என்றாா்.