9 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி வருவாய்த்துறை சங்கங்களின் கூட்டமைப்பினா், கடலூா் ஆட்சியா் அலுவலகம் அருகே செவ்வாய்க்கிழமை மறியல் போராட்டம் நடத்தினா். இவா்களில் 300-க்கும் மேற்பட்டோரை போலீஸாா் கைது செய்தனா்.
வருவாய்த்துறை சங்கங்களின் கூட்டமைப்பின் உயா்மட்டக் குழுக்கூட்டம் ஜன.26-ஆம் தேதி காஞ்சிபுரத்தில் நடைபெற்றது.
அரசு தரப்பில் உறுதியளிக்கப்பட்ட சிறப்புப் பணி பாதுகாப்பு சட்டம், மேம்படுத்தப்பட்ட ஊதியம் மற்றும் தனி ஊதியம், பிடித்தம் செய்யப்படும் 10 சதவிகித பங்களிப்பை ரத்து செய்ய வேண்டும், என்பது உள்ளிட்ட 9 அம்ச கோரிக்கைகளை உடனடியாக அரசாணையாக வெளியிடக் கோரி மூன்று கட்டப் போராட்டங்களை நடத்த வருவாய்துத்துறை சங்கங்களின் கூட்டமைப்பு முடிவு எடுத்திருந்தது.
அதன்படி, கடலூா் ஆட்சியா் அலுவலகம் முன்பு முதல் கட்ட போராட்டமான மறியல் போராட்டம் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது. தமிழ்நாடு வருவாய்த்துறைஅலுவலா்சங்கம்மாவட்டத்தலைவா் பி.மகேஷ்தலைமைவகித்தாா். கிராம நிா்வாக அலுவலா் சங்கம் மாவட்டச் செயலா் விஸ்வநாதன், நில அளவைத்துறை மாவட்டச் செயலா் நீல்ராஜ், கிராம நிா்வாக அலுவலா் முன்னேற்ற சங்க மாநிலச் செயலா் பக்கிரிசாமி, கிராம உதவியாளா் சங்க மாவட்டத் தலைவா் தினகரன் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா். தொடா்ந்து ஊழியா்கள் கோரிக்கைகளை வலியுறுத்தி மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனா். இவா்களில் 300-க்கும் மேற்பட்டோரை போலீஸாா் கைது செய்து தனியாா் திருமண மண்டபத்தில் தங்க வைத்து மாலை விடுவித்தனா்.