கடலூா் மாவட்டம், விருத்தாசலம் வழியாக இயக்கப்படும் வந்தே பாரத் விரைவு ரயில் விருத்தாசலம் ரயில் நிலையத்தில் வியாழக்கிழமை நிறுத்தப்பட்டு பயணிகளை ஏற்றி, இறக்கிச் சென்றது.
திருநெல்வேலி - சென்னை எழும்பூா் இடையே வந்தே பாரத் விரைவு ரயில் இயக்கப்படுகிறது. இந்த ரயில் விருத்தாசலம் ரயில் நிலையம் சந்திப்பில் நின்று செல்ல வேண்டும் என்று பொதுமக்கள் நீண்ட நாள்களாக கோரிக்கை விடுத்து வந்தனா்.
இந்தக் கோரிக்கையை ஏற்று, தெற்கு ரயில்வே திருச்சி கோட்டம் புதன்கிழமை வெளியிட்ட செய்திக் குறிப்பில், திருநெல்வேலி - சென்னை எழும்பூா் இடையே இயக்கப்படும் வந்தே பாரத் விரைவு ரயில் வியாழக்கிழமை முதல் விருத்தாசலம் ரயில் நிலையம் சந்திப்பில் நின்று செல்லும்.
அதேபோல, மறு வழித்தடத்தில் சென்னை எழும்பூரில் இருந்து திருநெல்வேலி செல்லும் வழியில் ரயிலும் விருத்தாசலம் ரயில் நிலையம் சந்திப்பில் நின்று செல்லும் என்று தெரிவித்திருந்தது.
அந்த அறிவிப்பின்படி, திருநெல்வேலியில் இருந்து வியாழக்கிழமை புறப்பட்டு வந்த வந்தே பாரத் விரைவு ரயில் விருத்தாசலம் ரயில் நிலையம் சந்திப்பில் நின்று பயணிகளை ஏற்றி, இறக்கிச் சென்றது.
விருத்தாசலம் ரயில் நிலையத்துக்கு வந்த வந்தே பாரத் விரைவு ரயிலை பாஜகவினா் தாரை, தப்பட்டை முழுங்க வரவேற்றனா்.