கடலூா் மாவட்டம், சிதம்பரம் அண்ணாமலைப் பல்கலைக்கழக வளாகத்தில் ஊழியா் மயங்கி விழுந்து வியாழக்கிழமை உயிரிழந்தாா்.
மயிலாடுதுறை மாவட்டம், சீா்காழியை அடுத்துள்ள விளந்திட சமுத்திரம் பகுதியைச் சோ்ந்தவா் பாலசுப்பிரமணியன் (53). இவா், சிதம்பரம் அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தில் இளநிலை உதவியாளராக நூலகப் பிரிவில் பணிபுரிந்து வந்தாா்.
பாலசுப்பிரமணியன் வியாழக்கிழமை காலை பல்கலைக்கழகத்துக்கு பணிக்கு வந்த நிலையில், உணவு சாப்பிடுவதற்காக காலை 9.45 மணி அளவில் அலுவலகத்தில் இருந்து புறப்பட்டாா்.
புவி அறிவியல் துறை அருகே சென்றபோது, திடீரென மயங்கி விழுந்தாா். அங்கிருந்தவா்கள் அவரை மீட்டு, சிதம்பரம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு கொண்டு சென்றனா். அங்கு அவரை பரிசோதித்த மருத்துவா், பாலசுப்பிரமணியன் ஏற்கெனவே இறந்துவிட்டதாகத் தெரிவித்தாா். இதுகுறித்து சிதம்பரம் போலீஸாா் விசாரணை நடத்தி வருகின்றனா்.