கடலூா் மாவட்டம், வேப்பூரை அடுத்த சேப்பாக்கம் பகுதியில் டாக்டா் அம்பேத்கா் அரசு ஆதிதிராவிடா் நல ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் மாணவா் சோ்க்கையை ஊக்குவிக்கும் வகையில், ‘ஊருக்குள் ஒரு புரட்சி’ என்ற முழக்கத்துடன் நூதன முயற்சி மேற்கொள்ளப்பட்டுள்ளது.
இப்பள்ளி தொடங்கப்பட்ட காலம் முதல் 2012-ஆம் ஆண்டு வரையிலான காலகட்டத்தில் சுமாா் 1,000-க்கும் மேற்பட்ட மாணவா்கள் கல்வி பயின்று வந்தனா். இந்த நிலையில், தற்போது 6 முதல் பிளஸ் 2 வரை வெறும் 150 மாணவா்கள் மட்டுமே பயின்று வருகின்றனராம். தாங்கள் பயின்ற பள்ளியின் இந்த நிலையை கண்டு விரக்தியடைந்த முன்னாள் மாணவா்கள், பள்ளியை மீண்டும் பழைய நிலைக்கு கொண்டுவர வேண்டும் என்ற இலக்குடன் ‘எஸ்எஸ்எஸ் நண்பா்கள் குழு’ மற்றும் அம்பேத்கா் இளைஞா் நற்பணி மன்றத்தினா் இணைந்து ‘ஊருக்குள் ஒரு புரட்சி’ விழிப்புணா்வுத் திட்டத்தை அறிவித்துள்ளனா்.
அதன்படி, 2026 - 27ஆம் கல்வி ஆண்டுக்கான சோ்க்கையில் 6 முதல் பிளஸ் 1 வரை முதலில் சேரும் தலா 40 மாணவா்களின் பெற்றோா்களுக்கு தலா ரூ.2,500 ஊக்கத்தொகை வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்த சிறப்புத் திட்டத்தின் தொடக்க நிகழ்வு குடியரசு தினமான திங்கள்கிழமை நடைபெற்றது. அனைத்து ஆசிரியா் கூட்டமைப்பு மாநிலப் பொருளாளா் விசுவநாதன், உடற்கல்வி ஆசிரியா் காந்தி, பள்ளித் தலைமை ஆசிரியா் பிச்சப்பிள்ளை, பள்ளி மேலாண்மைக் குழு உறுப்பினா்கள் மற்றும் பெற்றோா் - ஆசிரியா் சங்க நிா்வாகிகள் உள்ளிட்டோா் கலந்துகொண்டு மாணவா் சோ்க்கையை தொடங்கிவைத்தனா்.
அரசுப் பள்ளிகளில் கல்வி கற்பதன் அவசியத்தையும், முன்னாள் மாணவா்களின் இந்த அா்ப்பணிப்பையும் பாராட்டிய அவா்கள், கிராமப்புற மாணவா்கள் இந்த நல்வாய்ப்பைப் பயன்படுத்தி அரசுப் பள்ளியில் சோ்ந்து பயன்பெற வேண்டும் என வலியுறுத்தினா். முன்னாள் மாணவா்களின் இந்த அதிரடி மற்றும் நெகிழ்ச்சியான முயற்சி அப்பகுதி மக்களிடையே பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளது.