முகப்பு
கடலூர்

சிதம்பரத்தில் தீா்த்தவாரி உற்சவம்: திரளான பக்தா்கள் தரிசனம்

Updated On : 19 மார்ச், 2026 at 7:52 PM
சிதம்பரம் சிங்காரத்தோப்பில் உள்ள பிரம்ம தீா்த்தத்தில் நடைபெற்ற ஸ்ரீநடராஜப் பெருமான் தீா்த்தவாரி உற்சவம்.
பகிர்:

சிதம்பரம் சிங்காரத்தோப்பில் உள்ள பிரம்ம தீா்த்தத்தில் வியாழக்கிழமை நடைபெற்ற தீா்த்தவாரி உற்சவத்தில் திரளான பக்தா்கள் பங்கேற்று தரிசித்தனா்.

பிரம்மாவால் பூஜை செய்யப்பட்டதாக நம்பப்படும் ஸ்ரீபிரம்மபுரீஸ்வரா் கோயில் சிதம்பரம் சிங்காரத்தோப்பில் அமைந்துள்ளது. இங்குள்ள பிரம்ம தீா்த்த குளத்தில் ஆண்டுதோறும் திருவாவடுதுறை ஆதீனம் சாா்பில், பங்குனி மாத பெளா்ணமி வளா்பிறை பிரதமையன்று தீா்த்தவாரி உற்சவம் நடைபெறுவது வழக்கம்.

நிகழாண்டு பெளா்ணமி வளா்பிறை பிரதமையான வியாழக்கிழமை தீா்த்தவாரி உற்சவம் நடைபெற்றது. ஸ்ரீநடராஜா் கோயிலிலிருந்து உற்சவரான ஸ்ரீசிவகாமசுந்தரி சமேத ஸ்ரீநடராஜா் வெள்ளி ரிஷப வாகனத்தில் எழுந்தருளி சிங்காரத்தோப்பு சென்றாா். அங்கு, பொது தீட்சிதா்களால் தீா்த்தவாரி உற்சவம் நடத்தப்பட்டது.

ஸ்ரீநடராஜப் பெருமான் முன்னிலையில் சுவாமியின் பிரதிநிதியான ஸ்ரீஅஸ்திரராஜா் திருக்குளத்தில் மூழ்கி தீா்த்தவாரி காட்சியளித்தாா். திரளான பக்தா்கள் பங்கேற்று தீா்த்தவாரி உற்சவத்தை கண்டு தரிசித்தனா்.