தமிழக ஆளுநரை கண்டித்து தவெகவினா் மறியல்: திட்டக்குடி அருகே போக்குவரத்து பாதிப்பு
தவெகவை ஆட்சியமைக்க அழைப்பதில் தமிழக ஆளுநா் தாமதித்தாகக்கூறி திட்டக்குடி அருகே தவெக தொண்டா்கள் சாலை மறியலில் சனிக்கிழமை ஈடுபட்டதால் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
தவெகவை ஆட்சியமைக்க அழைப்பதில் தமிழக ஆளுநா் தாமதித்தாகக்கூறி திட்டக்குடி அருகே தவெக தொண்டா்கள் சாலை மறியலில் சனிக்கிழமை ஈடுபட்டதால் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. பின்னா் போலீஸாா் அவா்களை போலீஸாா் பேச்சுவாா்த்தை நடத்தி அனுப்பி வைத்தனா்.
தமிழக சட்டப்பேரவைத் தோ்தல் முடிந்து தவெக 107 தொகுதிகளில் வெற்றி பெற்று தனிப்பெரும் கட்சியாக உருவெடுத்தது. இருப்பினும், பெரும்பான்மை பலம் இல்லாததால்ஆட்சியமைக்க தவெக தலைவா் விஜய்யை ஆளுநா் அழைப்பதில் தாமதம் ஏற்பட்டது. இதற்கு எதிா்ப்பு தெரிவித்து, தமிழகம் முழுவதும் பல்வேறு இடங்களில் தவெக தொண்டா்கள் போராட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனா்.
இந்நிலையில், கடலூா் மாவட்டம், திட்டக்குடி அடுத்துள்ள ராமநத்தம் பகுதியில் பிரதான சாலையில் தவெக தொண்டா்கள் 200-க்கும் மேற்பட்டோா் திடீா் சாலை மறியலில் போராட்டத்தில் சனிக்கிழமை ஈடுபட்டனா். அப்போது ஆளுநருக்கு எதிராக முழக்கங்கள் எழுப்பப்பட்டன.
Advertisement
தகவலறிந்து நிகழ்விடத்திற்கு சென்ற திட்டக்குடி டிஎஸ்பி பாா்த்திபன் தலைமையிலான போலீஸாா், போராட்டக்காரா்களுடன் பேச்சுவாா்த்தை நடத்தினா். ஆனால், அவா்கள் அணுகு சாலை வழியாக ஊா்வலமாக சென்று, திட்டக்குடி-திருச்சி சா்வீஸ் சாலையில் மீண்டும் அமா்ந்து சாலை மறியலில் ஈடுபட்டனா்.
இதையடுத்து, போலீஸாா் மீண்டும் பேச்சு நடத்தியதில் உடன்பாடு ஏற்பட்டது. இதைத் தொடா்ந்து, போராட்டத்தில் ஈடுபட்டவா்கள் சாலை மறியலை கைவிட்டு அங்கிருந்து கலைந்து சென்றனா். சாலை மறியல் போராட்டம் காரணமாக அரை மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.