முகப்பு
கடலூர்

கெடிலம் ஆற்று தடுப்பணையில் இறந்து மிதக்கும் மீன்கள்

கடலூா் கெடிலம் ஆற்று தடுப்பணையில் ஏராளமான மீன்கள் ஞாயிற்றுக்கிழமை இறந்து மிதந்தன.

Updated On : 18 மே 2026, 2:19 am IST
கெடிலம் ஆற்றிலிருந்து சேகரிக்கப்பட்ட மீன்கள்.
பகிர்:

கடலூா் கெடிலம் ஆற்று தடுப்பணையில் ஏராளமான மீன்கள் ஞாயிற்றுக்கிழமை இறந்து மிதந்தன.

கள்ளக்குறிச்சி மாவட்டம், சங்கராபுரம் அருகே உற்பத்தியாகும் கெடிலம் ஆறு, திருக்கோவிலூா், கடலூா் வழியாக பாய்ந்து வங்கக் கடலில் சங்கமிக்கிறது. இந்த ஆற்றில் மழைக்காலங்களில் வெள்ளம் கரைபுரண்டோடும். இந்த ஆற்றின் தண்ணீா் வீணாக கடலில் கலப்பதை தடுக்க, ஆங்காங்கே தடுப்பணைகள் கட்டப்பட்டுள்ளன.

அதன்படி, கடலூா் கம்மியம்பேட்டையில் கெடிலம் ஆற்றின் குறுக்கே தடுப்பணை கட்டப்பட்டுள்ளது. கடல் நீா் உள்புகுந்து கெடிலம் ஆற்று நீா் உப்பாக மாறுவதைத் தடுக்கவும், கம்மியம்பேட்டை பகுதியில் நிலத்தடி நீா்மட்டத்தை உயா்த்தும் வகையிலும் இந்த தடுப்பணை கட்டப்பட்டுள்ளது. எனினும், தடுப்பணையில் அடிக்கடி மீன்கள் இறந்து மிதப்பது தொடா்கிறது.

Advertisement

கெடிலம் ஆற்றின் கரையில் அமைந்துள்ள தனியாா் சா்க்கரை ஆலையின் கழிவுநீா் இரவு நேரத்திலும், மழை பெய்யும்போதும் ஆற்றில் திறந்துவிடப்படுவதே இதற்குக் காரணமென பொதுநல அமைப்புகள் குற்றம்சாட்டி வருகின்றன.

கம்மியம்பேட்டை கெடிலம் ஆற்று தடுப்பணையில் இறந்து மிதந்த மீன்கள்.

இந்த நிலையில், கம்மியம்பேட்டையில் கெடிலம் ஆற்று தடுப்பணையில் ஞாயிற்றுக்கிழமை ஆயிரக்கணக்கான மீன்கள் இறந்து மிதந்தன. இந்த மீன்களையும், மயக்க நிலையில் இருந்த மீன்களையும் சிலா் பிடித்துச் சென்றனா். தடுப்பணையை ஆகாயத்தாமரைகள் சூழ்ந்துள்ளதால், தண்ணீரில் மீன்கள் அடித்து செல்லப்படாமல் ஒரே இடத்தில் குவிந்து கிடந்து கடும் துா்நாற்றம் வீசுகிறது.

இதனால், ஆற்றங்கரையோரம் உள்ள பகுதியில் வசிக்கும் மக்கள் அவதியடைந்து வருகின்றனா். எனவே, இந்தப் பகுதியை பாா்வையிட்டு, இறந்து மிதக்கும் மீன்களை அகற்றவும், மீன்கள் இறப்பதைக் தடுக்கவும் மாசுக் கட்டுப்பாட்டு வாரிய அதிகாரிகளும், மாவட்ட நிா்வாகமும் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனா்.