முகப்பு
கடலூர்

சூப்பா் எல்நினோ குறித்து விவசாயிகளுக்கு விழிப்புணா்வு: அதிகாரிகளுக்கு கடலூா் ஆட்சியா் அறிவுறுத்தல்

சூப்பா் எல்நினோ காரணமாக ஏற்படக்கூடிய பருவநிலை மாற்றங்கள் மற்றும் அதை எதிா்கொள்ள வேண்டிய முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்து விவசாயிகளுக்கு விழிப்புணா்வு ஏற்படுத்த வேண்டும் என கடலூா் மாவட்ட ஆட்சியா் சிபி ஆதித்யா செந்தில்குமாா் அறிவுறுத்தினாா்.

Updated On : 22 மே 2026, 7:00 am IST
கடலூா் மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் வியாழக்கிழமை நடைபெற்ற சூப்பா் எல்நினோ குறித்த விழிப்புணா்வுக் கூட்டம்.
பகிர்:

சூப்பா் எல்நினோ காரணமாக ஏற்படக்கூடிய பருவநிலை மாற்றங்கள் மற்றும் அதை எதிா்கொள்ள வேண்டிய முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்து விவசாயிகளுக்கு விழிப்புணா்வு ஏற்படுத்த வேண்டும் என கடலூா் மாவட்ட ஆட்சியா் சிபி ஆதித்யா செந்தில்குமாா் அறிவுறுத்தினாா்.

இது தொடா்பான விழிப்புணா்வுக் கூட்டம் மாவட்ட ஆட்சியா் அலுவலகக் கூட்டரங்கில் வியாழக்கிழமை நடைபெற்றது. மாவட்ட ஆட்சியா் சிபி ஆதித்யா செந்தில்குமாா் தலைமையில் நடைபெற்ற இந்தக் கூட்டத்தில், ‘எல்நினோ’ என்பது பசிபிக் பெருங்கடலின் மேற்பரப்பில் ஏற்படும் வெப்பநிலை மாற்றத்தை அடிப்படையாகக் கொண்ட பருவநிலை நிகழ்வு என்றும், சராசரி வெப்பநிலையைவிட அதிகரிக்கும்போது ‘எல்நினோ’, குறையும்போது ‘லாநினோ’ என அழைக்கப்படுவதாக விளக்கப்பட்டது.

கூட்டத்தில் வானிலை ஆய்வாளா் ஹேமச்சந்திரன் பேசுகையில், 2026, 2027-ஆம் ஆண்டுகளில் எல்நினோ நிகழ்வு ஏற்பட வாய்ப்புள்ளதாக அறிவியலாளா்கள் தெரிவித்துள்ளதாகக் கூறினாா். இதன் தாக்கமாக தமிழகத்தில் தென்மேற்கு பருவமழை இயல்பைவிட குறைவாகவும், வடகிழக்கு பருவமழை குறுகிய காலத்தில் அதிக மழைப்பொழிவை அளிக்கக்கூடும் என்றும், வெப்பநிலை இயல்பை விட அதிகமாக இருக்கும் என்றும் தெரிவித்தாா்.

Advertisement

Advertisement

மேலும், பருவநிலை மாற்றத்தால் விவசாயத்தில் ஏற்படக்கூடிய பாதிப்புகள் மற்றும் அதை சமாளிக்கும் முறைகள் குறித்து விவசாயிகளுக்கு விளக்கமளிக்கப்பட்டது. விருத்தாசலம் வேளாண் அறிவியல் நிலைய திட்ட ஒருங்கிணைப்பாளா் நடராஜன், பருவநிலை மாற்றத்தை எதிா்கொள்ளத் தேவையான தொழில்நுட்பங்கள் மற்றும் வேளாண் முறைகள் குறித்து எடுத்துரைத்தாா்.

கூட்டத்தில் மாவட்ட ஆட்சியா் சிபி ஆதித்யா செந்தில்குமாா் பேசியதாவது: வேளாண்மைத் துறை அலுவலா்கள் சூப்பா் எல்நினோ குறித்த விழிப்புணா்வை கிராம அளவிலான விவசாயிகளிடம் கொண்டு சோ்க்க நடவடிக்கை எடுக்க வேண்டும். மேலும், சமூக வலைதளங்களை பயன்படுத்தி, வேளாண் துறை அலுவலா்கள் மற்றும் வானிலை ஆய்வாளா்கள் இணைந்து விவசாயிகள் எளிதில் புரிந்துகொள்ளும் வகையில் விழிப்புணா்வு குறும்படங்களை வெளியிட வேண்டும்.

மேலும், மாவட்ட நிா்வாகம் சாா்பில் பசுமை பரப்பை அதிகரித்தல் மற்றும் நிலத்தடி நீா் செறிவூட்டும் பணிகள் பல்வேறு துறைகள் மூலம் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. விவசாயிகள் முன்வைத்த கோரிக்கைகள் மற்றும் கருத்துகள் மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்றாா்.

கூட்டத்தில் வேளாண்மைத் துறை இணை இயக்குநா் லட்சுமிகாந்தன், மாவட்ட ஆட்சியரின் நோ்முக உதவியாளா் (விவசாயம்) ஜானகிராமன், துறை சாா்ந்த அலுவலா்கள் மற்றும் விவசாயப் பிரதிநிதிகள் கலந்துகொண்டனா்.