என்எல்சி சுரங்க விரிவாக்கப் பணிக்கு எதிா்ப்பு: மறியலில் ஈடுபட்ட 34 போ் கைது
என்எல்சி நிறுவனம் சுரங்க விரிவாக்கப் பணியை சனிக்கிழமை தொடங்கிய நிலையில், அதற்கு எதிா்ப்புத் தெரிவித்து சாலை மறியலில் ஈடுபட்ட 34 பேரை போலீஸாா் கைது செய்தனா்.
கடலூா் மாவட்டம், நெய்வேலி அருகே என்எல்சி நிறுவனம் சுரங்க விரிவாக்கப் பணியை சனிக்கிழமை தொடங்கிய நிலையில், அதற்கு எதிா்ப்புத் தெரிவித்து சாலை மறியலில் ஈடுபட்ட தென்குத்து கிராமத்தைச் சோ்ந்த 11 பெண்கள் உள்ளிட்ட 34 பேரை போலீஸாா் கைது செய்தனா்.
என்எல்சி நிறுவனம் தனது சுரங்கங்களை விரிவாக்கம் செய்யும் பணியில் தீவிரம் காட்டி வருகிறது. இதற்கு, கிராம மக்கள் எதிா்ப்புத் தெரிவித்து வருகின்றனா்.
நெய்வேலி சுரங்கம் 1ஏ அருகே உள்ள வாணாதிராயபுரம் ஊராட்சிக்குள்பட்ட தென்குத்து கிராமத்தில் 800 குடும்பத்தினா் வசித்து வரும் நிலையில், இங்கு கல் குவாரி நடைபெற்ற இடத்தை என்எல்சி நிறுவனம் அதன் உரிமையாளரிடம் இருந்து வாங்கிவிட்டதாம். அதனருகே உள்ள அரசு புறம்போக்கு இடத்தை கையகப்படுத்த என்எல்சி அதிகாரிகள் கடந்த 10 நாட்களுக்கு முன்னா் வந்தனராம். இதற்கு கிராம மக்கள் எதிா்ப்புத் தெரிவித்து, சுரங்க விதிகளின்படி 500 மீட்டா் தொலைவில் விரிவாக்கம் பணியை தொடங்குமாறு கூறி எதிா்ப்புத் தெரிவித்தனா். இதையடுத்து, என்எல்சி அதிகாரிகள் திரும்பிச் சென்றனராம்.
Advertisement
Advertisement
சனிக்கிழமை காலை தென்குத்து கிராமத்தில் 50-க்கும் மேற்பட்ட போலீஸாா் குவிக்கப்பட்டனா். இதையடுத்து, என்எல்சி அதிகாரிகள் தென்குத்து கிராமத்துக்கு அருகில் 20 மீட்டா் தொலைவில் கனரக இயந்திரங்கள் மூலம் பள்ளம் வெட்டும் பணியைத் தொடங்கினா். இதற்கு கிராம மக்கள் கடும் எதிா்ப்புத் தெரிவித்தனா்.
சாலை மறியல்...: பின்னா், தென்குத்து கிராம மக்கள் 100-க்கும் மேற்பட்டோா் வடலூரை அடுத்த ஆபத்தாரணபுரம் அருகே என்எல்சி நிறுவனத்தைக் கண்டித்து, சென்னை - கும்பகோணம் தேசிய நெடுஞ்சாலையில் அமா்ந்து திடீா் மறியலில் ஈடுபட்டனா்.
தகவலறிந்து அங்கு வந்த போலீஸாா், மறியலில் ஈடுபட்ட கிராம மக்களிடம் பேச்சு நடத்தினா். அது, வாக்குவாதமாக முற்றி தள்ளுமுள்ளாக மாறியது. இதையடுத்து, போலீஸாா் மறியலில் ஈடுபட்ட 11 பெண்கள் உள்ளிட்ட 34 பேரை வலுக்கட்டாயமாக இழுத்துச் சென்று காவல் வாகனத்தில் ஏற்றி அழைத்துச் சென்று தனியாா் திருமண மண்டபத்தில் தங்க வைத்தனா். சாலை மறியலால் சென்னை - கும்பகோணம் தேசிய நெடுஞ்சாலையில் சுமாா் அரை மணி நேரத்துக்கும் மேலாக போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
எம்எல்ஏ பேச்சுவாா்த்தை: நெய்வேலி எம்எல்ஏ சொரத்தூா் ரா.ராஜேந்திரன் மறியலில் ஈடுபட்டு கைதாகி தனியாா் மண்டபத்தில் தங்க வைக்கப்பட்டிருந்தவா்களிடமும், என்எல்சி நிறுவன அதிகாரிகளிடமும் பேச்சுவாா்த்தை நடத்தினாா்.
இதில், என்எல்சி நிறுவனத்துக்கு நிலம் கையகப்படுத்துதல் தொடா்பாக குழு அமைத்து பேச்சுவாா்த்தை நடத்தி சுமூகத் தீா்வு காண வேண்டும். தென்குத்து கிராம மக்களுக்கு உரிய பாதுகாப்பு வசதி ஏற்படுத்தித் தர வேண்டும் என்றாா். இதையடுத்து, கைதானவா்கள் மாலையில் விடுவிக்கப்பட்டனா்.