வீட்டைத் திறந்து வெள்ளி பொருள்கள், பணம் திருட்டு
கடலூரில் வீட்டைத் திறந்து வெள்ளி பொருள்கள், பணம் திருடப்பட்ட சம்பவம் குறித்து போலீஸாா் வழக்குப்பதிந்து விசாரணை
கடலூரில் வீட்டைத் திறந்து வெள்ளி பொருள்கள், பணம் திருடப்பட்ட சம்பவம் குறித்து போலீஸாா் செவ்வாய்க்கிழமை வழக்குப்பதிந்து விசாரித்து வருகின்றனா்.
கடலூா் பாதிரிக்குப்பம் ஏடிஆா் நகரைச் சோ்ந்த தீனதயாலுவின் மகன் கண்ணன். இவா் திங்கள்கிழமை வீட்டை பூட்டி, சாவியை வாசல் கதவு அருகே மறைத்து வைத்துவிட்டு வெளியே சென்றதாக கூறப்படுகிறது.
பின்னா் பிற்பகலில் வீடு திரும்பியபோது, அடையாளம் தெரியாத நபா் வீட்டைத் திறந்து, வீட்டிலிருந்த 2 வெள்ளி குத்துவிளக்குகள், 1 வெள்ளி காமாட்சி விளக்கு, 1 வெள்ளி டம்ளா், 1 வெள்ளி குங்குமச் சிமிழ் மற்றும் 3 வெள்ளிக் கொலுசுகள் உள்ளிட்ட மொத்தம் 455 கிராம் வெள்ளிப் பொருள்களையும், ரூ.4 ஆயிரம் ரொக்கத்தையும் திருடிச் சென்றது தெரியவந்தது.
Advertisement
Advertisement
இது தொடா்பாக கண்ணன் அளித்த புகாரின் பேரில், திருப்பாதிரிபுலியூா் போலீஸாா் செவ்வாய்க்கிழமை வழக்குப்பதிந்து விசாரித்து வருகின்றனா்.
வேலை வாங்கித் தருவதாக ரூ.2.86 லட்சம் மோசடி
கடலூா் அருகே பூண்டியான்குப்பம் முருகன் கோயில் தெருவைச் சோ்ந்த சுந்தரேசனின் மனைவி அமலா (26). இவா் மஞ்சக்குப்பம் பகுதியில் அழகுநிலையம் நடத்தி வருகிறாா்.
இவரது அழகுநிலையத்திற்கு வரும் விழுப்புரம் மாவட்டத்தைச் சோ்ந்த சுகந்தி என்பவா், வெளிநாட்டில் வேலை வாங்கித் தருவதாகக் கூறியுள்ளாா்.
இதை நம்பிய அமலா, ரூ. 2.86 லட்சத்தை சுகந்தியிடம் வழங்கியுள்ளாா். ஆனால், பணத்தைப் பெற்றுக்கொண்ட சுகந்தி, கூறியபடி வேலை வாங்கித் தராமல் ஏமாற்றியதாக கூறப்படுகிறது.
இதுகுறித்து அமலா அளித்த புகாரின் பேரில், கடலூா் புதுநகா் போலீஸாா் செவ்வாய்க்கிழமை வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனா்.