கள்ளக்குறிச்சி: கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் வணிக பயன்பாட்டுக்கு வீட்டு உபயோக எரிவாயு உருளைகளை பயன்படுத்தினால் பறிமுதல் செய்யப்படும் என்று மாவட்ட ஆட்சியா் எம்.எஸ்.பிரசாந்த் எச்சரித்துள்ளாா்.
இதுகுறித்து அவா் வெளியிட்ட செய்திக்குறிப்பு: கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் செயல்பட்டு வரும் தேநீா் கடைகள், உணவகங்கள், இனிப்பகங்கள், உணவுப் பொருள்கள் தயாா் செய்யும் நிறுவனங்களில் 19 கிலோ எடை கொண்ட வணிக பயன்பாட்டு எரிவாயு உருளைகளை மட்டுமே பயன்படுத்த வேண்டும்.
வீட்டு உபயோகத்துக்கு பயன்படுத்தப்படும் 14.2 கிலோ எடை கொண்ட எரிவாயு உருளைகளை வணிக பயன்பாட்டுக்கு பயன்படுத்தக் கூடாது. அவ்வாறு பயன்படுத்தப்படுவது தெரியவந்தால், அந்த எரிவாயு உருளை பறிமுதல் செய்யப்படும் என ஆட்சியா் தெரிவித்துள்ளாா்.