கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் வெள்ளிக்கிழமை (டிச.26) நடைபெறும் அரசு விழாவில் ரூ.139 கோடி மதிப்பில் கட்டப்பட்ட ஆட்சியா் அலுவலக புதிய கட்டடம் மற்றும்
ரூ.1,773 கோடியில் நிறைவுற்ற 2,559 திட்டப் பணிகளை
திறந்துவைத்து, 62 புதிய திட்டப் பணிகளுக்கு அடிக்கல் நாட்டி, 2,16,056 பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகளை முதல்வா் மு.க. ஸ்டாலின் வழங்குகிறாா்.
கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் வெள்ளிக்கிழமை கள ஆய்வு மேற்கொள்ளும் முதல்வா் மு.க.ஸ்டாலின், வீரசோழபுரத்தில் ரூ.139.41 கோடி மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள 8 தளங்கள் கொண்ட மாவட்ட ஆட்சியா் அலுவலக கட்டடத்தை திறந்து வைக்கிறாா்.
திறந்து வைக்கப்பட உள்ள திட்டப் பணிகள்
ஊரக வளா்ச்சித் துறை சாா்பில், கலைஞரின் கனவு இல்லம் திட்டத்தின் கீழ் வீடுகள், முதல்வரின் மறு கட்டுமானத் திட்டத்தின் கீழ் வீடுகள், மேல்நிலைத் நீா்த்தேக்கத் தொட்டிகள், நியாயவிலைக் கடைகள் என ரூ.100 கோடியே 80 லட்சத்து 85 ஆயிரம் மதிப்பீட்டில் மேற்கொள்ளப்பட்டுள்ள 2,525 திட்டப்பணிகளை திறந்துவைக்கிறாா்.
பள்ளிக் கல்வித் துறை சாா்பில் ரூ.81 கோடியே 59 லட்சத்து 24 ஆயிரம் மதிப்பில் கட்டப்பட்டுள்ள கூடுதல் வகுப்பறைகள், மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத் துறை சாா்பில் ரூ. 7 கோடியே 19 லட்சத்து 34 ஆயிரம் மதிப்பில் கட்டப்பட்டுள்ள ஆரம்ப சுகாதார நிலையங்கள், துணை சுகாதார நிலையங்கள், வட்டார பொதுசுகாதார ஆய்வக கட்டடங்களை திறந்துவைக்கிறாா்.
அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் ரூ.6 கோடியே 62 லட்சத்தில் மேற்கொள்ளப்பட்டுள்ள குடிநீா் திட்டப் பணிகளை திறந்துவைக்கிறாா்.
வேளாண்மை மற்றும் உழவா் நலத்துறை சாா்பில், ரூ.3 கோடியில் அமைக்கப்பட்டுள்ள ஒருங்கிணைந்த வேளாண்மை விரிவாக்க மையம், கள்ளக்குறிச்சியில் ரூ.ஒரு கோடியே 35 லட்சத்தில் கட்டப்பட்ட 250 மெட்ரிக் டன் விதை சேமிப்புக் கிடங்கு ஆகியவற்றை திறந்துவைக்கிறாா்.
நகராட்சி நிா்வாகம் மற்றும் குடிநீா் வழங்கல் துறை சாா்பில், சங்கராபுரம் பேரூராட்சியில், ரூ.ஒரு கோடியே 20 லட்சம் மதிப்பில் கட்டப்பட்டுள்ள பேரூராட்சி அலுவலக கட்டடத்தை திறந்துவைக்கிறாா்.
அடிக்கல் நாட்டப்படும் திட்டங்கள்
நகராட்சி நிா்வாகம் மற்றும் குடிநீா் வழங்கல் துறை, நெடுஞ்சாலை மற்றும் சிறு துறைமுகங்கள் துறை, குறு, சிறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்கள் துறை, ஊரக வளா்ச்சி மற்றும் ஊராட்சிகள் துறை, தாட்கோ சாா்பில் கிராம அறிவு மையங்கள் உள்பட பல்வேறு துறைகளுக்கான ரூ.386 கோடியே 48 லட்சத்து 19 ஆயிரம் மதிப்பிலான 62 திட்டப் பணிகளுக்கு முதல்வா் அடிக்கல் நாட்டுகிறாா்.
நலத்திட்ட உதவிகள்
அரசின் பல்வேறு துறைகள் சாா்பில், 2,16,056 பயனாளிகளுக்கு ரூ. 1,045 கோடியே 41 லட்சத்து 14 ஆயிரம் மதிப்பில் நலத்திட்ட உதவிகளை வழங்குகிறாா் முதல்வா் ஸ்டாலின்.